நலன்புரி நிலையங்களின் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை பராமரிப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சிடம் 11 மில்லியன் ரூபாய் நிதியுதவி கோரியிருந்த நிலையில், தற்போது 6.5 மில்லியன் ரூபர் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

நலன்புரி நிலையங்களில் அடிப்படை வசதிகள் கோரியும், நிறுத்தப்பட்ட நிவாரணங்களை வழங்குமாறு கோரியும், பூந்தளிர் மாவட்ட பெண்கள் அமைப்பால் கடந்த 5ஆம் திகதி, மாவட்ட செயலாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கூறும்போதே மாவட்ட செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

நலன்புரி முகாம்களில் உள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சின் கீழுள்ள அதிகாரிகள், மாவட்ட செயலகத்திலுள்ள உத்தியோகஸ்தர்கள் ஆகியோரை இணைத்து குழுவொன்று அமைத்துள்ளோம்.

அந்தக்குழு, நலன்புரி நிலையங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டு குடிநீர், மலசலகூடம், ஆரம்ப பாடசாலை, பொதுநோக்கு மண்டபம் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை தரவுகளாக பதிவு செய்கிறார்கள்.

அந்த தரவுகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி, பிரதேச செயலகங்கள் ஊடாக அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

அத்துடன், பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்கள் வறிய நிலை காரணமாகவே இடைவிலகுகின்றனர். இதனால், அந்த மாணவர்களின் பெற்றோர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு செய்து வருகின்றது.

நிறுத்தப்பட்ட உலர் நிவாரணத்தை பொறுத்தவரையில். ஒவ்வொரு மாதத்திற்கும் எவ்வளவு உலர் நிவாரணம் தேவை என்பது தொடர்பிலும், யார் யாருக்கு நிவாரணங்கள் கொடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பிலான விபரங்கள் மீள்குடியேற்ற அமைச்சிற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கும் எடுத்துக்கூறியிருக்கின்றேன். நிவாரணம் தொடர்பான உறுதியான பதில் விரைவில் கிடைக்கப்பெறும்’ என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் 34 நலன்புரி நிலையங்கள் இருப்பதுடன், அந்த நலன்புரி நிலையங்களில் 1,308 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.