தொழுநோய் குறித்த மூட நம்பிக்கைகளை கைவிடவேண்டும்

Ketheeswaranதொழுநோய் தொடர்பில் 50 வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்த மூட நம்பிக்கையினை பொதுமக்கள் கைவிட்டு அந்நோய் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டிலான ஊடகவியலாளர் சந்திப்பு சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றது. இதன்போது கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

முன்னைய காலங்களில் தொழுநோய் தொடர்பான மூடநம்பிக்கை அதிகம் காணப்பட்டது. தொழுநோய் தொற்றுக்குரிய நோய் என்றும் இது குறைபாட்டு நோய் எனவும் ஆகவே குணப்படுத்த முடியாது எனவும் மக்கள் மத்தியில் எண்ணங்கள் இருந்தன.

தொழுநோய் தொற்றியவர்களை தொழுநோய் காப்பகங்களில் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள்.

தற்போது, மருத்துவ வசதிகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த நோயினை முற்றாக குணப்படுத்தக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. ஆகவே இந்த வடு முற்றாக நீங்க வேண்டும்.

இந்த நோய்த் தொற்று ஏற்பட்ட மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் இல்லை.

இந்த நோய்க்குரிய அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள வைத்திசாலை தோல் பிரிவிற்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.