தொடர்கிறது வரட்சி; வடக்கு,கிழக்கு உட்பட நாடு முழுவதும் 3 இலட்சம் பேர் பாதிப்பு

வடக்கு, கிழக்கு உட்பட ஸ்ரீலங்காவின் பல்வேறு பிரதேசங்களில் நிலவிவரும் வரட்சி காரணமாக மூன்று இலட்சத்து 10 ஆயிரத்து 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணம், சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தொடர்ச்சியான வரட்சி நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 78 ஆயிரம் குடும்பங்களில் அதிகளவானோர் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 ஆயிரத்து 458 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 678 பேர் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் வரட்சியினால் மூவாயிரத்து 867 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 5550 பேரும், வவுனியா மாவட்டத்தில் மூவாயிரத்து 111 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த பொலனறுவை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 480 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 309 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வெகுவிரைவில் அவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor