தொடரை வென்றது இந்தியா! தர வரிசையில் முதல் ரேங்க்!

முதல் டெஸ்ட் போட்டியை போலவே 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் தொடரை வென்று, தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

CRICKET-IND-NZL

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

இந்நிலையில் கொல்கத்தாவில் தொடங்கிய 2வது டெஸ்டின் 4வது நாளான நேற்று நியூசிலாந்து அணியை 178 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

முன்னதாக டாசில் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் 316 ரன்களும், 2வது இன்னிங்சில் 263 ரன்களும் குவித்தது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 204 ரன்களும், 2வது இன்னிங்சில் 197 ரன்களும் எடுத்து தோல்வியடைந்தது. உள்நாட்டில் இந்தியா ஆடிய 250வது டெஸ்டில் வென்றுள்ளது என்பது சிறப்பு.

நியூசிலாந்தின் 2வது இன்னிங்சில் முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர்குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதிகபட்சமாக டோம் லதம் 74 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் 54 ரன்கள், 2வது இன்னிங்சில் 58 ரன்கள் குவித்ததோடு 2 இன்னிங்சுகளிலும் நாட்-அவுட்டாக கடைசி வரை நின்ற இந்திய விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இம்மாதம் 12ம் தேதி 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, இந்தூரில் தொடங்குகிறது. தொடரை வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட் தர வரிசையில் இந்தியா 113 பாயிண்டுகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor