அரசாங்கம் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிமைகாளக் வைத்திருப்பதற்கு முயல்வது போன்று தீவுப் பகுதி மக்களையும் அச்சுறுத்தி அடிமைகளாக வைத்திருப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று இங்கு நடைபெறுகின்ற ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் தமது தீர்ப்பை வெளிப்படுத்தி வருவது போன்று தீவுப் பகுதி மக்களும் கடந்த தேர்தலின் மூலமாக தமது தீர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்றார் அவர்.
மாவை சேனாதிராசா தலைமையிலான கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவினர் நேற்று காலை நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்து மக்களின் தேவைகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இதன் போது தாம் அடிப்படை வசதிகளற்ற நிலையில் பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்று பிரதேசத்தில் எந்தவிதமான அபிவிருத்தியும் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று தொடர்ந்தும் பாகுபாடு காட்டப்பட்டு வருகின்றது எனவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கருத்துரை ஆற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் மேலும் கூறியவை வருமாறு:-
இந்தப் பிரதேசத்திற்கு வருகை தரவேண்டுமென்று பல தடவைகள் முயற்சித்த போதும் இதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்பட்டன. ஆயினும் இன்றைய தினம் இங்கு வந்திருக்கின்றோம். நெடுந்தீவு மக்கள் கடந்த காலங்களில் மிகப் பெரிய தியாகத்தைச் செய்திருக்கின்றனர். ஆனால் அந்த மக்களை அச்சுறுத்துவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆயினும் இத்தகைய அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு மத்தியிலும் கடந்த தேர்தலின் மூலமாக மக்கள் தமது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
இருந்தும் இந்நிலையை மாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கலாம். ஆனால் எத்தகைய மாற்றங்களும் இனிமேல் ஏற்படப் போவதில்லை என்பதனை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதே வேளையில் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பத்துக் கோடி ரூபா ஒதுக்கப்பட்டு பல அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் கூறப்பட்டது.
ஆனால் இங்கு பாரிய அபிவிருத்தி வேலை எதுவும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே தாங்கள் வாழ்ந்து வருகின்றனர் என மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். அவ்வாறாயின் இங்கு அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஏதாவது வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இது குறித்துக் கேட்கவும் வேண்டும் என்று மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.
இங்குள்ள மக்கள் தமது பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் எம்மிடம் எடுத்துக் கூறியிருக்கின்றனர். அதே நேரம் அச்சம் காரணமாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதவர்களும் இருக்கின்றனர். இதேவேளையில் கூட்டமைப்பு இங்கு பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
ஆகவே அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது உறுதியுடன் செயற்பட வேண்டும். – என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.