தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு

வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற மத்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

army-security-at-religious-places-in-ayodhy

இதையடுத்து அந்த நகரங்களில் உள்ள அனைத்து இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்சுவாமி தலைமையில், டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஜி.பி., திலீப் திரிவேதி, உத்தர பிரதேச மாநில டி.ஜி.பி., பானர்ஜி, அம்மாநில உள்துறை முதன்மை செயலர் தீபக் சிங் சிங்கால் உட்பட பலர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தான், மூன்று நகரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

பிரபலமான மதவழிபாட்டுத் தலங்கள் உள்ள இந்த மூன்று நகரங்களிலும், அதிக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன மின்னணு சாதனங்களை பொருத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், மூன்று நகரங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் பிரிவுகளை பணியில் ஈடுபடுத்துவது என்றும், 24 மணி நேரமும், பாதுகாப்புப் படையினர் ஈடுபாட்டோடுபணியாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அயோத்தியில் 2005ம் ஆண்டு ராமஜென்ம பூமி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். பாதுகாப்பு படையினர் சுட்டு 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். 2006 மற்றும் 2010ல் வாரணாசியில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்துக்களும், இஸ்லாமியர்களும் சரிசமமாக வசித்துவரும் மதுராவும் இப்போது தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts