தீர்வு விடயத்தில் தனது பொறுப்பை அரசு நிறைவு செய்ய வேண்டும்! – மாவை எம்.பி.

இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசு தனது பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

mavai-mp

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடியாகப் பேசவேண்டும் என்கிறார். அதேநேரம் அமைச்சரவைப் பேச்சாளர் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்கின்றார். இவ்வாறாக அரசு இரு வேறாகக் கூறி வருவது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இதனாலேயே நாம் அரசுக்கு இவ்வாண்டின் இறுதிவரை காலக்கெடு விதித்துள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரசின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அரசை சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்படுவதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியும், அரசுமே காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு வருமாறு அரசு அழைத்தபோது, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசிடம் தமிழர் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணவேண்டும் என நெருக்குதல் கொடுத்ததன் காரணத்தாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2011இல் பேச்சு மேசைக்குச் சென்றது. ஆனால், 2012 இல் இந்தப் பேச்சை அரசு குழப்பியடித்தது. இதன் பின்னர்தான் தீர்வு விடயம் தொடர்பில் ஐ.நா. உட்பட சர்வதேச சமூகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடியது” – என்றார் அவர்.