திருடர்களால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்!

கொள்ளையர்களினால் கோடாரி தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன், சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.

yathusan

உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடாரியினால் வெட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தாய் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார் .

தந்தையும் மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிடரிப்பகுதியில் கடுமையான காயமேற்பட்டிருந்த மகனான சண்முகநாதன் யதுர்ஷனன் (வயது 19 ) என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யதுர்ஷனன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.பாடசாலைக் காலங்களில் 20 இற்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களைத் தனதாக்கிய யதுசன் படிப்பிலும் சிறந்து விளங்கினார். க.பொ.த சா/தரத்தில் 9A சித்திகளைப் பெற்றதுடன், மருத்துவ பீடத்துக்கான கனவுடன் இரண்டாவது தடவையாக இவ்வருடம் உயர்தரத்திற்கு தோற்றி பெறுபேறுக்காகக்காத்திருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது