தியாகதீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

உலகில் முதன்முதலில் சாத்வீகப்போராட்டத்தின் உச்சக்கட்டமான நீராகாரம் இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ளான்.

யாழ்ப்பாணம் – ஊரெழுவைச் இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் திலீபன், 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்தார்.

தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார்.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகைளை முன்வைத்து தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் கூட அருந்தப் போவதில்லை என்று அறிவித்தார்.

உண்ணாவிரதத்தின் பன்னிரெண்டாம் நாளான 26 ஆம் திகதி 265 மணித்தியாலயங்களின பின்னர் ஒருதுளி நீர்கூட அருந்தாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த தியாகதீபம் திலீபன், காலை 10.58க்கு வீர மரணம் அடைந்தான்.

அதிகாரத்துவம் அவனை சாகவிட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்து மீண்டும் ஆயுதம் தங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது.

உயிர் துறந்த பின்பும் மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ். மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

தியாகதீபம் திலீபனின் அஞ்சலி வணக்க நிகழ்வுகள் யாழ்ப்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தநிலையில் இறுதிநாள் நிகழ்வு இன்றைய தினம் யாழப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor