தாக்குதலுக்குள்ளான பல்கலை. மாணவன் கைது

இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த சப்ரகமுவ பல்கலைக்கழக சமூக விஞ்ஞான மொழியியல் கற்கை பீடத்தின் மாணவன் விடுதிக்குத் திரும்பிய நிலையில் இன்று மதியம் பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, முகமாலைப் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் (வயது 25) என்ற மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட பொலிஸார் குறித்த மாணவனை கைதுசெய்து கொழும்பு நான்காம் மாடிக்கு அனுப்பியுள்ளனர் என அவரது பெற்றோருக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனான சுதர்சன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் பலாங்கொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் இவர் மேலதிக சிகிச்சைக்காக ரத்னபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இன்று சிகிச்சை முடித்து விடுதிக்கு சென்றார். இந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சக மாணவனான வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (வயது 25) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து பயங்கரவாத புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் நான்காம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.