தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள்!!

தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள். அரசியல் பணக்காரர்களாக வர நினைக்கிறார்கள்.

என்னுடைய வாழ்காலம் என்பது இன்னும் சிறிது காலம் என்பது அனைவருக்கும் தெரியும். 80 வயதுக்கும் மேல் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி நாடாளுமன்ற அங்கத்துவமும் பெறுவது இதுவே முதல் தடவை என என்னை ஒருவர் பாராட்டினார்.

அந்தவகையில் எங்களுடைய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளமை எமக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளது. அந்த வகையில் இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor