தம்பிராசா மீது கழிவொயில் வீச்சு

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கழிவொயில் வீச்சியுள்ளனர்.

thambirasaa

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த வலியுறுத்தியும் இடம்பெயர்ந்த மக்களுக்கு இடைநிறுத்தப்பட்ட நிவாரணத்தை மீண்டும் வழங்கக் கோரியும் இவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கெனவே கடந்த வருடம் (2013) இரண்டு முறை உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்ட இவர் அந்தப் போராட்டங்களை 2 மற்றும் 4 நாட்களில் கைவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (19) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது கழிவொயில் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளதாகத் தம்பிராசா தெரிவித்தார்.

இதுதொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

தம்பிராசா மூன்றாவது தடவையாகவும் உண்ணாவிரதம்