தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்னுடன் பேச்சு நடத்த மறுத்துவிட்டனர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நாங்கள் பேசத் தயார். எனினும் அவர்கள் என்னுடன் பேச்சு நடத்த மறுத்துவிட்டனர். பேச்சுவார்த்தைகள் இன்றி நான் எவ்வாறு அதிகாரப் பரவலாக்கல் குறித்து பேச முடியும்? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

mahintha

13வது அரசியலமைப்பின்கீழ் பொலிஸ் அதிகாரங்களை தவிர, ஏனைய அதிகாரங்கள் குறித்து பேச நாம் தயார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய பிரதமரை சந்தித்தமை குறித்து நான் அதிருப்தியடையவில்லை. அவர்கள் யாரையும் சந்திப்பதற்கு ஜனநாயக உரிமையுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நான் முதற் தடவை அவரை சந்தித்தபோதே அழைப்பு விடுத்தேன். இந்நிலையில் ஐ.நா. வில் அவரை சந்திப்பேன். மேலும் இவ்வருட இறுதியில் சார்க் மாநாட்டிலும் சந்திப்பேன். அப்போது மீண்டும் அவருக்கு அழைப்பு விடுப்பேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக த இந்துவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

கேள்வி நல்லிணக்க ஆணைக்குழு இதுவரை எதனை சாதித்துள்ளது?

பதில் : இலங்கையின் நல்லிணக்கத்துக்காக அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 35 பரிந்துரைகளை ஏற்கனவே இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இன்னும் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய பரிந்துரைகள் உள்ளன. காணி விவகாரம் உள்ளிட்ட மீதமுள்ள பரிந்துரைகளை ஒரே இரவில் செய்யமுடிக்க முடியாது

கேள்வி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தற்போதைய அமர்வில் உங்கள் தூதுவர் காணாமல் போன சம்பவங்கள் ஆயிரக்கணக்காக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளாரே?

பதில் : காணாமல் போனோர் தொடர்பில் ஆராய ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 20ஆயிரம் முறைப்பாடுகள் வரை விசாரணை செய்யப்படுகின்றன. முறைப்பாடுகள் வடக்கில் இருந்தும் இராணுவத்தரப்பில் இருந்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. ஆனால் எனக்கு தெரிந்த வகையில் காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற அதிகமான முறைப்பாடுகளில் புலிகளே சம்மந்தப்பட்டுள்ளனர்.

கேள்வி இலங்கை அரசாங்கம், போரில் வெற்றி பெற்றபோதும் ஐந்து வருடங்களுக்கு பின்னரும் சமாதானத்தில் வெற்றி பெறவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளதே?

பதில் : நீங்கள் வடக்குக்கு சென்றால் உண்மையை நிலையை காண்பீர்கள். பழைய அரசியல்வாதிகளின் மனங்களை மாற்றுவது கடினமானது. அவர்கள் புலிகளினால் வளப்படுத்தப்பட்டவர்கள். எனினும் இன்றைய இளம் தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்கின்றனர். கடந்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நாங்கள் அங்கு நடத்தினோம். நாங்கள் தோல்வியடைவோம் என்று தெரிந்தும் தேர்தலை நடத்தினோம். யுத்தத்தின் பின்னர் புதுவிதமான சுதந்திரம் உள்ளது. வடக்கு மக்கள் தெற்குக்கும் தெற்கு மக்கள் வடக்கும் பயணம் செய்கின்றனர்.

கேள்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் செய்து பிரதமர் மோடியிடம் தமது பிரச்சினைகளை பட்டியல்படுத்தினர். குறிப்பாக அதிகாரப் பரவலாக்கல் செய்யாமை வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் மற்றும் சிவில் நிர்வாகத்தில் உங்கள் தலையீடு என்பன குறித்து கூறியுள்ளார்களே?

பதில் : அவ்வாறு எந்த தலையீடுகளும் இல்லை. அங்குள்ள பிரதான அதிகாரிகளை நானே நியமித்துள்ளேன். அந்த அதிகாரிகளை வடமாகாண சபை வேண்டாம் என்றும் அவர்களை இடமாற்றம் செய்யுமாறும் கோரும்போதும் அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்கின்றனர். இதன்போது நான் என்ன செய்ய முடியும்?

கேள்வி நீ்ங்கள் பிரதம செயலாளரைப் பற்றி குறிப்பிடுகின்றீர்கள். நீங்கள் தேர்தலை நடத்தியுள்ளீர்கள். எனவே நீங்கள் இந்த செயற்பாட்டை தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கக்கூடாதா?

பதில் : வடமாகாண சபையின் பிரதம செயலாளரை பொறுத்தவரையில் அவர் ஒரு அரச அதிகாரியாவார். அவர் சுயாதீன அதிகாரி. இந்தநிலையில் 13வது அரசியலமைப்பின்கீழ் பொலிஸ் அதிகாரங்களை தவிர, ஏனைய அதிகாரங்கள் குறித்து பேச தாம் தயார்.

கேள்வி முதலமைச்சர் தமக்குத் தேவையான அதிகாரிகளை நியமிக்க முடியாதா? அந்த அதிகாரிகள் முதலமைச்சருக்கு அறிக்கையிட தேவையில்லையா?

பதில் : அது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்த முடியும். இந்த விடயம் குறித்து தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசத்தயார். எனினும் அவர்கள் என்னுடன் பேச்சு நடத்த மறுத்துவிட்டனர். பேச்சுவார்த்தைகள் இன்றி நான் எவ்வாறு அதிகாரப் பரவலாக்கல் அல்லது ஏனைய விடயங்கள் குறித்து பேச முடியும்?

கேள்வி இந்தியப் பிரதமரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்தமை தொடர்பில் நீ்ங்கள் அதிருப்தி அடைந்துள்ளீர்களா?

பதில் : இல்லை. ஒருபோதும் இல்லை. அவர்கள் யாரையும் சந்திக்க முடியும். அது ஜனநாயகமாகும்.

கேள்வி இராணுவ பிரசன்னம்? வடக்கு கிழக்கில் அதிகமான இராணுவத்தினர் உள்ளனரே அவர்கள் எடுத்துள்ள காணிகள்?

பதில் : போர் முடிந்த பின்னர் வடக்கு கிழக்கில் இருந்து 90வீதமான இராணுவத்தினர் அகற்றப்பட்டுள்ளனர். அவர்களை ஏனைய இடங்களுக்கு நகர்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் எவ்வளவு தூரம் நான் செல்ல முடியும்? நான் இலங்கைக்குள்ளேயே இதற்கான இடத்தை தெரிவு செய்யவேண்டும். இந்தநிலையில் அவர்களை இந்தியாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ மாற்றலாமா?

கேள்வி இப்பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில் : அதனை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அவ்வாறு அப்பகுதிகளில் தமிழ் தக்களின் நினைவுச் சின்னங்களை அழிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படவில்லை. எந்தக் குடியேற்றமும் இல்லை. ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் எவரும் எங்கும் வாழலாம். தமிழரோ சிங்களவரோ அல்லது முஸ்லிம்களோ எங்கும் வாழலாம்.

கேள்வி நீங்கள் தமிழக அரசியல் கட்சிகளுடனும் முதல்வருடன் சிறந்த உறவை பேணாமை மத்திய அரசாங்கத்துடன் சிறந்த உறவை பேணுவதில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதே?

பதில் : நான் என்ன செய்ய முடியும்? தமிழக முதல்வருடன் பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எப்போதும் நாம் அவருடன் சமாதானத்துக்கு செல்ல வெள்ளைக்கொடியை உயர்த்திக்கொண்டிருக்கின்றேன்.

கேள்வி பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் காணப்பட்ட விடயம்?

பதில் : அது மிக பாரதுரமான தவறு. பாதுகாப்பு செயலாளர் அது பற்றி தெரிந்துகொண்டதும் எனக்கு அறிவித்தார். நாங்கள் மன்னிப்பு கோரினோம். நான் கூட மன்னிப்பு கோரினேன்.

கேள்வி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது நீண்டகால பிரச்சினையாகவுள்ளதே?

பதில் : மீன்களுக்கு எப்போதும் எல்லைகள் இருப்பதில்லை என்பதனை நான் நம்புகின்றேன். மீனவர்கள் மீன்களை தேடி செல்வார்கள். ஆனால் இந்திய மீனவர்கள் மீன்வளத்தை அழிக்கும் வகையில் செயற்படுகின்றனர். அதனை எம்மால் பொறுக்க முடியாது. இந்தியாவில் கூட இவ்வாறான முறைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

கேள்வி நீங்கள் மீனவர்களை விடுவித்தாலும் படகுகளை விடுவிக்கவில்லை. அது குறித்து நீங்கள் பரிசீலிக்கின்றீர்களா?

பதில் : இந்த தருணத்தில் இல்லை. தற்போது நான் படகுகளை திருப்பி அனுப்ப அனுமதித்தால் அவர்களை மீண்டும் வந்து அதே விடயத்தை செய்வார்கள்.

கேள்வி எதிர்வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடியை சந்திப்பீர்களா? எவ்வாறான உறவை பகிரவுள்ளீர்கள்?

பதில் : அவரால் முடியுமானால் எம்மால் இதனை செய்யலாம். அவரை சந்திப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். ஆனால் உறவு எங்கு போகும் என்று தற்போது கூற முடியாது. புதுடில்லியில் ஒரு சிறியளவிலான சந்திப்பையே நான் மேற்கொண்டிருந்தேன். எனினும் சிறந்த இணைப்பு உள்ளது. அவர் மிகவும் பலமான தலைவர். பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளார். எம்மால் அதிகமான விடயங்களை கையாள முடியும்.

கேள்வி இலங்கைககும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஒரு புதிய தடத்தை அடைந்துள்ளதா? ஐ.நா. மனித உரிமைப் பேரவை விவகாரம்?

பதில் :அந்த புதிய தடமாறுதல் தேர்தலுக்கு முன்னரே வந்துவிட்டது. இந்தியா ஜெனிவா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. சர்வதேச விசாரணைக்கு ஆதரவு அளிக்கவில்லை.

கேள்வி 19471 முறைப்பாடுகள் காணாமல் போனோர் தொடர்பில் கிடைத்துள்ளதாக ஜெனிவாவில் உங்கள் தூதுவர் தெரிவித்துள்ளார். அப்படியாயின் ஐ.நா. வின் உதவியை ஏன் பெறக்கூடாது?

பதில் : அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டுபிடிக்க உள்ளக பொறிமுறையே எமக்குத் தேவைப்படுகின்றது. சிவிலியன்களும் இராணுவத்தினரும் போரின்போதே காணாமல் போயுள்ளனர். நாங்கள் ஐக்கிய நாடுகள் விசாரணையை நிராகரித்துவிட்டோம். ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பொறுத்தவரையில் அவர் ஆரம்பத்தில் இருந்தே பக்கசார்பாகவே நடந்து கொண்டார். அவரை இலங்கைக்கு வர அழைத்தோம். இங்கு வந்து ஒன்றை கூறினார். ஆனால் திரும்பிச் சென்ற பின்னர் வேறு ஒன்றை கூறினார். எம்மிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எனவே புதிய மனித உரிமை ஆணையாளர் இலங்கை வரவிரும்பினால் அவரின் கோரிக்கை நாம் ஏற்போம்.

கேள்வி ஆனால் மூதுர் படுகொலை சம்பவம் மற்றும் செனல் 4 குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதாக உங்கள் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை உங்கள் தடைகள் விசாரணையை தடுக்காது என்று பிள்ளை கூறியுள்ளாரே?

பதில் : எமது அரசாங்கம் உள்ளக விசாரணை குறித்தே பேசுகின்றது. ஆனால் அவை சர்வதேசமயப்பட இடமளிக்கமாட்டோம். அவர்கள் நாளை காஷ்மீர் தொடர்பிலும் கோரிக்கையை விடுக்கலாம். எனவே அதற்கு இணங்கமுடியாது. இந்தியாவோ இலங்கையோ வெளிநாட்டு விசாரணைகளுக்கு இடமளிக்க முடியாது. இவை அனைத்தும் அரசியலாகும்.

கேள்வி எனினும் நவநீதம் பிள்ளை 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பரிந்துரைத்த பிரேரணைகளுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததே?

பதில் : அதனை நாங்கள் புரிந்துகொண்டோம். அப்போது தேர்தல் சிக்கல்களை எதிர்கொண்டனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் பலமானது. அது பலமானதாகவே இருக்கும். புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா பாரிய பங்களிப்பை செய்தது என்பதனை நாம் மறக்கமாட்டோம். இந்தியா வழங்கிய ஆதரவை மறக்கமாட்டோம்.

கேள்வி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலை தொடர்பில் விசாரணைகள் என்ன கூறுகின்றன?

பதில் : அது தொடர்பில் நாங்கள் இன்னும் விசாரணை நடத்திவருகின்றோம். அவரை இராணுவத்தினர் சுட்டுக்கொல்லவில்லை. அது உண்மையென எனக்குத் தெரியும். அதனால்தான் விசாரிக்கின்றோம். போர் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். போரில் யார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று எவ்வாறு தெரியும்?

கேள்வி இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

பதில் :ஆம். நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நான் முதற் தடவை அவரை சந்தித்தபோதே அழைப்பு விடுத்தேன். ஐ.நா. வில் அவரை சந்திப்பேன். மேலும் இவ்வருட இறுதியில் சார்க் மாநாட்டிலும் சந்திப்பேன். மீண்டும் அவருக்கு அழைப்பு விடுப்பேன்.

கேள்வி விமான பராமரிப்பு தளம் ஒன்றை சீனாவுக்கு வழங்கப்போவதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில் : இது ஒரு விடயமா? இந்தியாவுக்குள் சீன நிறுவனங்கள் இல்லையா? தென்னிந்தியாவில் கூட உள்ளதே.இலங்கையில் சீனா என்ற விடயத்தில் இருந்து இந்தியா எந்த கவலையும் கொள்ளவேண்டியதில்லை.நான் இங்கிருக்கும் வரை அதனை உறுதிபடுத்துவேன்.

கேள்வி மிக விரைவாக தேர்தலுக்கு நீங்கள் போகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில் அவ்வாறு நடக்கலாம். அதனை நான் மறுக்கவில்லை.