தமிழ் கைதிகளை விடுவிக்கவும்: அனந்தி

விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

ananthy-sasikaran-tna

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெற்றது. சபை அமர்வில் கலந்துகொண்டு அனந்தி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அநுராதபுரத்தில் 53 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்ட பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பிணக்கொன்று ஏற்பட்டது. இதற்கு காரணமான நால்வர் பிடிக்கப்பட்டனர்.

இவர்களில் 3 தமிழ் கைதிகளுக்குத் தண்டனை வழங்கும் பொருட்டு சிங்களக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கு மாற்றப்பட்டனர். மற்றைய கைதி அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்ந்தும் தமிழ்க் கைதிகளின் சிறையிலேயே இருந்தார்.

இந்நிலையில், சிங்கள கைதிகளின் சிறைக்கு மாற்றப்பட்ட தமிழ்க் கைதிகள் மூவரும், சிங்களக் கைதிகளால் கடுமையான சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால், அந்த மூன்று தமிழ்க் கைதிகளும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே, மேற்படி கைதிகள் மற்றும் சிறையிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணை தொடர்பில் வடமாகாண சபை அக்கறையெடுத்து ஜனாதிபதியின் மூலம் அக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், ‘ஆர்.சுரேஸ், அன்ரன் சாம்சன் மற்றும் கோபிநாத் ஆகிய மூன்று தமிழ் கைதிகளே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாளை (இன்று) வெள்ளிக்கிழமை (22) நேரில் சந்திக்கவுள்ளதாக’ தெரிவித்தார்.