தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பிரகடனம்

mavai mp inவடக்கு,கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்கள் தமது மண்ணில் தன்னாட்சி உரிமையை நிலை நாட்டும் அரசியல் தீர்வை சர்வதேசமே அங்கீகரி என்று அணி திரண்டு உரக்க உயரக் குரலெழுப்புவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேதினப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக் கூட்டத்திலேயே, இந்தப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் 32 பிரகடனங்கள், கட்சியின் பொதுச் செயலாளர் மாவை.சேனாதிராஜாவினால் வாசிக்கப்பட்டன. அதில் முக்கிய பிரகடனங்கள் வருமாறு,

இலங்கையில் தொழிலாளர், விவசாயிகள், அறிவியல், தொழில்நுட்பத்துறைகளில் உழைப்போர், அரச ஊழியர், தனியார்துறை ஊழியர் என் போரின் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதுடன் நாட்டில் கட்டுப்பாடற்று உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யக் கூடிய வகையில் அவர்களது சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்க அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் வேலையில்லா தோருக்கு வேலைவாய்ப்பபு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் கல்வி கற்ற துறைகளுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பு வழங்குவதையும் உறுதிப்படுத்தவேண்டும். வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் அந்தப் பிரதேசத்திலுள்ள கோயில்கள், பாடசாலைகள், பொதுக் கட்டங்கள், சொத்துக்கள் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக வலி. வடக்கு மக்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவும், சம்பூர் மக்கள் கடந்த ஐந்து ஆண்டு களுக்கு மேலாகவும் ஒட்டு மொத்தமாக உள்நாட்டில் சுமார் ஒரு இலட்சம் மக்களும் இந்தியாவில், முகாம்களில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மக்களும் அகதிகளாகவுள்ளனர். அவர்களுக்கு மீளக்குடியேற்றப்படும் வரை போதுமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்குப் பிரதேசக் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கும் இராணுவ பாஸ் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும். இந்திய சீன, தென்னிலங்கை மீனவர்கள் மீன்வளத்தைக் கொள்ளையடிப்பது உடன் நிறுத்தப்பட வேண்டும். உலகில் மேம்பட்டுவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை, சந்தைப் பொருளாதாரம் என்பனவற்றின் வளர்ச்சிக்கேற்ப உயர்தர வகுப்பு மற்றும் பல்கலைக் கழகங்கள் போதியளவு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படவில்லை.

அறிவியல் ஆய்வுகள், தொழில் வாய்ப்பில் திட்டமிடல் அதற்கேற்ற கல்விக் கொள்கையில் பிராந்தியங்களில் வகுக்கப்பட்ட திட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும். தேசியக் கொள்கை எனும் வகையில் பிராந்தியங்களுக்கும் உலகிற்கும் பொருந்தாக் கொள்கைகளைத் திணிப்பது நிறுத்தப்படவேண்டும்.

கல்விக் கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைவது நிறுத்தப்பட வேண்டும். மாணவர் கல்வியில் இராணுவத் தலையீடு நீக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வறுமைக் கோட்டின் கீழ்வாடும் தாய்மார் குழந்தைகள் சிறுவர் உணவின்மையால் போதிய வளர்ச்சியின்றி இலட்சக்கணக்கில் வீழந்து கிடக்கின்றனர். இவர்களுக்குப் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் சத்துணவு வழங்க வேண்டும்.

மழையின்மையால் பாதிக்கப்பட்டு உற்பத்தி வீழ்சியடைந்த விவசாயிகளுக்கு அடுத்த கால போகமழை வரும் வரை நட்ட ஈடும் நிவாரணமும் வழங்க வேண்டும். அரசியல் காரணங்கள் என்று கூறி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளோர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலையோ நீதியோ வழங்கப்படாமல் இருக்கும் பெண்களுள்ளிட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் விவசாயிகள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் வங்கிகளிடம் பெற்ற கடன்களை, வட்டியைக் கட்டுவதில் இயலாமலுள்ளனர். வங்கி ஊழியர்களும் நெருக்கடிகளுக்குள்ளாகின்றனர். அது போல வெள்ளம், வரட்சியினால் விவசாயிகள் பெரும்பாதிப்புக்குள்ளாகின்றனர். இத்தகையவர்களின் கடன்களை பொதுத்திட்டமொன்றின் கீழ் நீக்கி விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவுத்துறை குறிப்பாக வடபகுதியில் மக்களின் தேவைகளிலும் பொருளாதார விருத்தியிலும், சமூகப் பங்களிப்பிலும் பெரும் பங்காற்றிப் பெருமை சேர்த்திருக்கிறது. ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கை, தனியார்மயக்கொள்கை பெருமுதலாளிகளின் முதலீடுகளினால் கூட்டுறவுத்துறை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊழியர்களுக்குக்கூட சம்பளம் வழங்க முடியாமலும் உள்ளன. தனியார் துறையுடன் போட்டி போட்டு முன்னேறுவதற்கு அரசு கூட்டுறவுத்துறைக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஊக்கமளிக்க வேண்டும் கூட்டுறவுத்துறைக்கு புத்துயிர் அளிக்கப்படவேண்டும்.

போதைவஸ்துக்கள், வீரியத் தன்மை அதிகரித்த மேலை நாட்டுக் குடிவகைகள், பாவனை தமிழர் பிரதேசங்களில் அதிகரித்தள்ளன. இளம் சமூகம் கலாசார சீரழிவுகளிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும். பெண்கள் பாலியல் வன்புனர்ச் சிக்குள்ளாக்கப்படுவதும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்குள்ளாக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மக்கள் மத்தியில் இதற்கான விழிப் புணர்வூட்டப்படுவதுடன் இளம் பெண்கள் சிறுவர்கள் பாது காப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கென சட்டம் ஒழங்கு அதிகாரங்கள் மாகாணங்களுக்கு இருக்க வேண்டும். இலங்கையில் நடைமுறையிலிருக்கும் கொடூர பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டுவதுடன் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நம்பிக்கை வாய்ந்த விசாரனைக்குழுவினால் விசாரிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

மேநாளில் உழைக்கும் வர்க்கம் தொழிலாளர், விவசாயிகள், அறிவியலாளர், புதிய தொழில் நுட்பவியலாளர், நுகர்வோர் மொத்தத்தில் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக உள்நாட்டிலும் உலகத்தோடு ஒட்டியும் குரல் கொடுக்கவும் போராடவும் பயனுறவும் ஒன்றுபட்டு உழைப்போம் எனவும் இலங்கையில் புரையோடிப்போயிக்கும் தீர்க்கப்படாமலிருக்கும் ஒரு தேசிய இன அடையாளத்தையே அழித்து விட பேரினவாத சக்திகள் அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் போது போர்க்குற்றங்களை விசாரிக்கவும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் ஏற்பட்டு வரும் சர்வதேசத்தின் சந்தர்ப்பங்களையும் அனுசரணையையும் பற்றி நின்று இராஜதந்திர மூலோபாய அணுகுமுறைகளில் ஒன்றுபட்ட இலங்கைத் தீவில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்கள் தம் மண்ணில் தன்னாட்சி உரிமையை நிலை நாட்டும் அரசியல் தீர்வை சர்வதேசமே அங்கீகரி எனவும் அணி திரண்டு உரக்க உயரக் குரலெழுப்புவோம்! செயலாற்ற உறுதி பூணுவோம் வாருங்கள் என்று அறை கூவல் விடுத்தார்.

Related Posts