தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலகவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும் எனச் சொன்னார். 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் அவர் டேவிட் கமரூன் செய்ததைப்போல் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் யாவும் ஆதரவு தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சிமாத்திரம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பொது அமைப்புடனான சந்திப்பின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் 24ஆம் திகதிய நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்களை வலியுறுத்தியே நடைபெறவுள்ளது.

எழுக தமிழ் பேரணி தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும், கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த பேரணியில் கூட்டமைப்பில் இருந்து யார் கலந்து கொள்கிறார்கள் என தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான போராட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் இராஜதந்திர ரீதியாக பயன்படுத்தி தென்னிலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகைளை முன்னிறுத்த வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts