தமிழ் இன அழிப்பு நடைபெற்றமைக்கான ஆவணங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் திரட்டப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
சுன்னாகம் பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்த தாவது:
இந்த ஆண்டு ஐ.நா மனித உரி மைகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக இன அழிப்புத் தொடர்பில் பலர் பல்வேறு விடயங்களைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஐ.நா சபையில் இதுவரை இன அழிப்புத் தொடர்பில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளை நாம் பெற்றுள்ளோம். அதில் என்ன விடயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதை ஆராய்ந்துள்ளோம்.
இன அழிப்புத் தொடர்பான பிரேரணை கொண்டு வரப்படுவதென்றால் அதற்கு நிறையத் தகவல்கள், தரவுகள் திரட்டப்படவேண்டும்.அதில் ஒரு சில தகவல்களை நாம் ஏற்கெனவே திரட்டியுள்ளோம்.இருப்பினும் அதில் புதிது புதிதாக வரும் தகவல்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பல தகவல்கள் திரட்டப் பட வேண்டியிருக்கின்றன. அதனை திரட்டும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுள்ளன என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஐ.நா மனித உரிமைகள் சபையில் சர்வதேச விசாரணை கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையினாலேயே, தமிழ் மக்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் வடக்கு,கிழக்கில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.