தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வதற்கான அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை பொலிஸார் கைது செய்ய முடியும் என்பதுடன், அவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் தண்டப்பண அறவீடும் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.
“ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைக் கைது செய்ய நாடு முழுவதும் ஆயிரத்து 206 வீதித் தடைகள் பொலிஸாரால் போடப்பட்டுள்ளன. அவற்றில் 944 வீதித் தடைகள் பொலிஸ் பிரிவுகளிலும் 262 வீதித் தடைகள் மாவட்ட எல்லைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 36 ஆயிரத்து 115 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன” என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இதேவேளை, 26 படை முகாங்களில் 2 ஆயிரத்து 744 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.