தனிக்கட்சி தொடங்குகிறார் ரஜினி; பா.ஜ.க.வுடன் கூட்டணி?

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன், தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

linga-rajini

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு சென்றிருந்த நரேந்திர மோடி, ரஜினியின் வீட்டுக்கே சென்று சந்தித்தார். இச்சம்பவத்தால் இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதனையும் அறிவிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, ரஜினியை தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு அரசியலில் குதிக்க வலியுறுத்தியுள்ளார். பா.ஜ.க மேலிடம் அழுத்தம் கொடுக்க கொடுக்க ரஜினிக்கு அவரது வீட்டு தரப்பிலிருந்தும் அரசியலில் குதிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.

தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியதில்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததுதான் இதுவரை அவர் அரசியலுக்கு வராமல் இருந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

இதை சுட்டிக்காட்டும் ரஜினி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அடுத்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி அக்டிவ் பொலிட்டிக்ஸில் இருக்கமாட்டார். அதனால் உங்களது தயக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு களத்துக்கு வாருங்கள் என்று சொல்கின்றனராம்.

அதே நேரத்தில் பா.ஜ.க அழைப்பை ஏற்று அக்கட்சியில் இணைந்துவிட வேண்டாம் என்பதும் ரஜினியிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறதாம்.

தனிக்கட்சி தொடங்கி பா.ஜ.க அணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தையும் விட மிக மிக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் என்று ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆலோசனை வழங்கி வருகின்றனராம்.

ரஜினிகாந்தும் இதுதான் சரியான பாதையான இருக்க முடியும் என்ற அடிப்படையில் ஆமோதித்தபடியே தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம்.