தண்ணீர் போத்தல்களுக்கும், ஹெல்மட்களுக்கும் இன்று முதல் புதிய சட்டம்!

சந்தையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் ஹெல்மட் எனப்படும் பாதுகாப்பு தலைக் கவசங்களுக்காக, இன்றுமுதல் புதிய சட்ட நடைமுறை ஒன்று அமுல்படுத்தப்படுகின்றது.

இந்த புதிய சட்ட அமுலாக்கத்தின்படி இவை அனைத்திற்கும், SLS தரச் சான்றிதழ் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தயாரிப்புகள் அனைத்திற்கும் SLS தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அதனை இதுவரை அமுல்படுத்தாத வர்த்தகர்கள் தமது தயாரிப்புகளுக்க்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குடிநீர் போத்தல்களுக்கும் SLS தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இனி போத்தல்களில் தமது தயாரிப்பின் SLS தரம் கட்டாயமாக பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டம், இன்றுமுதல் அமுலாக்கப்படுகின்றது.

இதேவேளை, நுகர்வோர் அதிகார சபையினரால் கடந்த வருடம் 59 குடிநீர் போத்தல்களை தயாரிக்கும் நிறுனங்களின் குடிநீர் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 29 நிறுவங்களின் தயாரிப்புகள் உரிய தரத்தில் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இன்றுமுதல் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள் பயன்படுத்தும் ஹெல்மட் எனப்படும் பாதுகாப்பு தலைக் கவசங்களில், தர்ச்சான்றிதழ் அடையாளம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டாய சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

எனினும், அவ்வாறான தலைக்கவசங்களை பயன்படுத்தாத மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து பொலிஸாரினால் இன்று காலை முதல் அறிவுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும், மேலும் சில தினங்களில் இருந்து குறித்த தர்ச்சான்றிதழ் அடையாளம் பொறிக்கப்பட்ட தலைக் கவசங்களை பயன்படுத்தாத மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள், தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றுமுதல் மோட்டா சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், தர்ச்சான்றிதழ் அடையாளம் பொறிக்கப்பட்ட தலைக் கவசங்களை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor