ஜனாதிபதியின் அதிருப்தியை அடுத்து தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

ஜூன் 11ஆம் திகதி கோவிட்-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் பிழை இருப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஒரு நாள் கழித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ வல்லுநர் சமரவீர தொற்றுநோயியல் பிரிவில் இருந்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் புதிய பணிப்பாளராக மருத்துவ வல்லுநர் சமரவீரா நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளராக மருத்துவர் சமிதா கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

“நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ஜூன் மாதம் 11ஆம் திகதியன்று, 101 உயிரிழப்புகள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் பின்னர், குறித்த உயிரிழப்புகளில் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சில உயிரிழப்புகள் பெப்ரவரி 06முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான 04 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, இறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சில உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 உயிரிழப்புகள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி நேற்றைய கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Recommended For You

About the Author: Editor