ஜனநாயகம், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் எம்மோடு கைகோர்க்குமாறு எல்லா நாடுகளையும் அழைக்கிறேன் – ஜனாதிபதி

ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு எல்லா நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

1622094_10151836817446467_1011350602_n

எமது சனநாயக பயணத்திற்கும் அபிவிருத்திக்கும் தேசிய சுதந்திரத்தைப் உறுதிப்படுத்தவும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தவும் எல்லா நாடுகளும் எம்முடன் கைகோர்க்குமாறு நான் அன்புடன் அழைக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று காலை கேகாலையில் நடைபெற்ற இலங்கையின் 66வது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போது எமது நாட்டில் எல்லா சமயங்ளையும் பின்பற்றும் பல்வேறு மொழிகளைப் பேசும் எல்லோரும் இன்று ஒரு ஐக்கியமிகுந்த தேசமாக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க பாதையில் பயணிக்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே, எங்களது போட்டி பச்சை நீலம் என்பதோ, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்பதோ அல்ல என்பதையும் எமது போட்டி நாட்டின் மீது அன்பு செலுத்துகின்றவர்களுக்கும் நாட்டுக்கு துரோகமானவர்களுக்கும் இடையிலானதாகும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டார்.

நாங்கள் பிரதேச சபைகள், மாகாண சபைகள், பொதுத் தேர்தல், சனாதிபதி தேர்தல்களை நடாத்தியதன் காரணமாக இன்று கீழ்மட்ட சனநாயக நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி பதவி வரை வடக்கு, கிழக்கு தெற்கு என எல்லா இடங்களிலும் மக்கள் கருத்து பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது என்றும் அவ்வுரையில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

66வது தேசிய சுதந்திர தின விழாவில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை

முழு இலங்கைத் தீவும் சுதந்திரத்தை அனுபவிக்கும் நிலையில், 66வது சுதந்திர தினத்திற்காக இன்று நாம் எமது தேசிய கொடியை ஏற்றுகிறோம். சுதந்திரத்துடன் தொடர்புடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தில் இன்று நாம் ஒன்றுகூடியுள்ளோம்.

இப்பிரதேசம் இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னர் தேவநம்பியதிஸ்ஸ மன்னரின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட விகாரைககைளக் கொண்ட பிரதேசமாகும். அதேபோன்று சோழ ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நாட்டை மீட்டெடுத்த விஜயபாகு மன்னனுக்கு பாதுகாப்பளித்தது இப்பிரதேசம் என எமது வரலாறு குறிப்பிடுகிறது. மகாநாக இளவரசரின் மனைவிக்கு இந்த கேகாலையில் வைத்துத் தான் ஒரு இளவரசர் பிறந்தார். இப்பகுதிக்கு நான் அண்மையில் சென்றிருந்தேன். அது யடஹலென என்ற கிராமமாகும். மகாநாக இளவரசருக்குப் பிறந்த மகன் யடாலதிஸ்ஸ. யடாலதிஸ்ஸவின் மகன் கோட்டாபய. கோட்டாபயவின் மகன் காவந்திஸ்ஸ. காவன் திஸ்ஸவின் மகன் எமது துட்டகைமுனு மன்னராகும்.

எமது சீத்தவக்க ராஜசிங்க மன்னரின் இராச்சியத்திற்கு உரித்தான கேகாலை மாவட்டத்தில் இந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறுவது மிகவும் பொறுத்தமானதாகும்.

எமது தாய் நாட்டுக்கு கௌரவமான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள 2005ஆம் ஆண்டில் மஹிந்த சிந்தனைக்கு இந்த நாட்டு மக்கள் அங்கீகாரம் அளித்தபோது, இலங்கையர்களுக்கு தமது தாய் நாட்டின் மூன்றில் ஒரு பகுதிக்கு சென்று வரக்கூடிய சுதந்திரம் இருக்கவில்லை. இந்த நாட்டின் கரையோரப் பகுதியின் மூன்றில் இரண்டு பகுதியை புலிகள் பலவந்தமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். நாட்டின் ஒருமைப்பாடு மட்டுமன்றி பொருளாதாரமும் பாதாளத்தில் இருந்தது.

நண்பர்களே,

சுதந்திரம் என்பது பொறுப்பு. பயங்கரவாத்திலிருந்து நாட்டை விடுவிக்கவோ பொருளாதார சுதந்திரத்தை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவோ முன்பு இருந்த அரசாங்கங்கள் தயாராக இருக்கவில்லை. விமான நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள், பெருந்தோட்ட கம்பனிகள், காப்புறுதி நிறுவனங்கள் போன்ற எல்லாவற்றையும் நாம் மீண்டும் மக்களுடைமையாக்கினோம். நெடுஞ்சாலைகள், நவீன வீதிவலையமைப்புகள், புதிய துறைமுகங்கள், புதிய விமான நிலையத்தை அமைத்து முழு நாட்டுக்கும் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்கும் ஒரே நாடாக இலங்கையை ஆக்கி சுதந்திரத்தின் பெறுமதியை நாம் இந்த நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்தோம்.

கொழும்பைப் போலவே ஏனைய எல்லா நகரங்களையும் கிராமங்களையும் சூழல் நட்புடையதாக ஆக்கினோம். வரலாற்றில் முதற் தடவையாக கிராமத்து சூழலை கொழும்புக்கு கொண்டுவந்து, கொழும்பில் உள்ள அபிவிருத்தியை கிராமங்களுக்கு கொண்டுசென்றுள்ளோம். குளங்கள், நீர்த்தேக்கங்களை அமைத்து நாட்டை அரிசியில் தன்னிறைவடையச் செய்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இலட்சக் கணக்கான பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழில்களைப் பெற்றுக்கொடுத்து வேலைவாய்ப்பில்லா பிரச்சினையை தீர்த்தமை எமது காலப் பகுதியில் செய்யப்பட்ட மிக முக்கியமானதோர் பணியாகும்.

முழு நாட்டினதும் பிள்ளைகளுக்கு மும்மொழிகளையும் போதிக்கவும் விஞ்ஞான பாடங்களைப் போதிக்க தொழிநுட்பத் துறையை ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கான நுழைவைப் பெற்றுக்கொள்ளாத இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் திசைக்கு நாட்டை வழிகாட்டியுள்ளோம். இன்று இந்த நாட்டில் காணப்படும் அபிவிருத்திகளை 8 வருடங்களுக்கு முன் எவரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது.

முதல் முறையாக பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை நடத்தி, நாம் எப்படி நாட்டை அபிவிருத்தி செய்துள்ளோம் என்பதையும் நாட்டின் சமாதானத்தையும் மக்களிடம் காணப்படும் நல்லிணக்கத்தையும் உலகுக்கு காட்டினோம். எமது நாட்டை விமர்சிக்கும் மிகக் கடுமையான விமர்சகரும் இந்த பாரிய உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்திகளை ஏற்றுக்கொள்வார்.

நாங்கள் மிகத் துரிதமாக யுத்தத்திலிருந்து சமாதானத்திற்கு

வினைத்திறனற்ற நிலையிலிருந்து வினைத்திறனை நோக்கி

அசுத்தத்திலிருந்து தூய்மைக்கு

பின்னடைவில் இருந்து அபிவிருத்திக்கு

அடிமைத் தனத்திலிருந்து சுதந்திரத்திற்கு முன்னேறி வருகிறோம்.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய வெற்றியை தெற்கில் உள்ள மக்கள் பெற்றுக்கொள்ளும்போது அதனை வடக்கு மக்களின் மிகப் பெரும் வெற்றியாக ஆக்கவேண்டியது எமது பொறுப்பாகுமென நாம் அன்று அறிந்திருந்தோம்

அன்று வடக்கு மக்களின் மனித உரிமைகள் புலிகளால் நசுக்கப்பட்டபோது அவற்றை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க எவரும் முன்வரவில்லை. அந்தத் தேவை எவருக்கும் இருக்கவில்லை. முன்னால் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், சேம் தம்பிமுத்து, லக்ஸ்மன் கதிர்காமர், ராஜீவ் காந்தி ஆகியோர்கள் கொலை செய்யப்பட்டபோது கூட மனித உரிமைகள் பற்றி எவரும் வாய் திறக்கவில்லை.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் எல்ரீரீஈ.யில் இணைந்திருக்க வேண்டும். ஆயிரக் கணக்கான பாடசாலை சிறுவர்கள் பலவந்தமாக எல்ரீரீஈ.யில் சேர்க்கப்பட்டிருந்தனர். பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும் வழியில் பிள்ளைகளை புலிகள் பலவந்தமாக பயிற்சி முகாம்களுக்கு இழுத்துச் சென்றனர். பிள்ளைகளுக்கு என தெற்கிலிருந்து செல்லும் உதவிகளை புலிகள் பறித்துக்கொண்டனர். வடக்கில் ஒரு பெண் பிள்ளை பருவ வயதை அடைவதற்கும் புலிகள் வரி அறவிட்டனர். எந்த காரணம் கொண்டும் முழுக் குடும்பமும் ஒன்றாகசேர்ந்து கிளிநொச்சியை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

வடக்கில் அரச ஊழியர் ஒருவர் மாதச் சம்பளத்தை பெற்றதும் அதில் ஒரு பகுதியை புலிகள் பிடுங்கிக்கொண்டனர். அதற்காக கச்சேரி வாசலிலேயே நின்றனர். புலிகள் பதுங்கு குழிகளை அமைக்க வட பகுதி மக்களை பலவந்தமாக ஈடுபடுத்தினர்.

இந்த வட பகுதி மக்கள் சுதந்திரத்தைத் தேடி சிங்கள மக்களிடம் வந்தனர். கொள்ளுப்பிட்டி, பம்பளப்பிட்டி, வெள்ளவத்தை, மோதர, மட்டக்குளி மற்றும் கொழும்புக்கு உள்ளும் வெளியிலுமாக எல்லா இடங்களிலும் சுதந்திரத்தைத் தேடி வந்த வட பகுதி மக்களால் நிரம்பிக் காணப்பட்டது.

2009ஆம் ஆண்டில் நாங்கள் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியிருக்காவிட்டால் வடக்கில் உள்ள பிள்ளைகளுக்கு இன்றுபோல பாடசாலைக்கு செல்ல, பல்கலைகழகங்களுக்குச் செல்ல முடிந்திருக்காது. இன்று வடக்கில் உள்ள மக்கள் அன்றைப் பார்க்கிலும் எவ்வளவு உரிமைகளை அனுபவிக்கின்றனர். வடக்கிற்கு சென்றால் அதனைக் கண்டுகொள்ளலாம்.

2009 மே 19ஆம் திகதிக்குப் பின்னர் இந்த 03 தசாப்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. எந்தவொரு வெடிகுண்டோ துப்பாக்கி சன்னமோ 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெடித்தது கிடையாது. எமது கிராமங்களில் வெள்ளைக் கொடிகள் கட்டப்படவும் இல்லை.

இன்று மீண்டும் வடக்கில் சுதந்திரத்தை அனுபவிக்கும் மக்களை பலியாக்குவதற்கு சில சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எப்போதும் ஆக்கிரமிப்பாளர்கள் இந்த நாட்டுக்கு முதலைக் கண்ணீரில் நீந்தி, மக்களையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் சனநாயகத்தைப் பாதுகாக்கும் போர்வையிலேயே இந்த நாட்டுக்கு வந்தனர்.

நண்பர்களே,

பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் உள்ள கஷ்டங்களை பலம்வாய்ந்த எல்லா நாடுகளும் அறிந்துகொள்ள வேண்டும். நாங்களும் அந்த நாடுகள் எதிர்நோக்கிய சவால்களைப் பார்க்கிலும் மிக மோசமான சவால்களை சந்தித்தோம். அந்த நாடுகளில் இருந்து நாம் வேறுபடுவது நாங்கள் பொது மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதை முதலாவது பொறுப்பாகக் கொண்டு செயற்படுமாறு முப்படையினருக்கும் கட்டளையிட்டிருந்தோம்.

அதேபோன்று பலம்வாய்ந்த நாடுகளில் காணப்பட்ட உள்நாட்டு யுத்தம் நிறைவுபெற்று நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றியடைய அவர்களுக்கு 50 வருடங்கள் 100 வருடங்கள் என காலம் தேவைப்பட்டது. என்றாலும் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி 04 வருடங்களில் இவ்வளவு முன்னேறிய ஒரு நாடு உலகில் உள்ளதா என நாம் கேட்கிறோம்.

பிரிவினைவாத அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளவர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய ஜெனீவா மனித உரிமைகள் குற்றச்சாட்டு எம்மீது சுமத்தப்படுவது ஒரு பாரதூரமான அநீதியாகும். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவர முயற்சிக்கும் யுத்தக் குற்றப் பிரேரணை சமாதானத்தை விரும்பாதவர்களின் வெற்றியாகும். இது ஒரு நாட்டின் இறைமை, சுதந்திரம், பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்கின்ற, சமாதானத்திற்காக அர்ப்பணத்துடன் செயற்படுகின்ற ஒரு தேசத்தை பயமுறுத்தும் செயலாகும். இந்த முன்மொழிவு சமாதானத்தையோ நியாயத்தையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. என்றாலும் எந்த நிலைமையிலும் பயமுறுத்தல்களுக்கு அடிபணிந்து நாங்கள் வெற்றிகொண்டுள்ள சுதந்திரத்தை இழக்க நாம் தயார் இல்லை என்பதை நாம் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறோம்.

இந்த நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் பாதுகாப்பது வெளியாரைப் பார்க்கிலும் எமது பொறுப்பாகும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் போது எங்களுக்கு கசப்பான கடந்தகாலம் நினைவுக்கு வருகிறது. கசப்பான அனுபவங்களை கடற்கரை மணலில் எழுதவும் நல்ல அனுபவங்களை கல்லில் செதுக்கவும் பழக வேண்டும். கடற்கரை மணலில் எழுதப்படுவது விரைவிலே அழிந்துபோகும் கல்லில் செதுக்கப்படுவது என்றும் நிலைத்திருக்கும். மணலில் எழுதி மறந்துவிட வேண்டியதையும், கல்லிலே செதுக்கி நினைவில் வைக்க வேண்டியதையும் நாம் அறிவோம்.

நண்பர்களே,

எங்களைக் கொலைசெய்ய வந்த பயங்கரவாதிகளையும் மன்னித்து அவர்களை இராணுவத்தில். பொலிஸில், சிவில் பாதுகாப்பு சேவையில் சேர்த்து அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக்கொடுத்தது அந்த கசப்பான கடந்த காலத்தை மறந்துவிட்டேயாகும். பலிவாங்குதல் என்றுமே எமது கலாசாரமன்று. பயங்கரவாதத்தை தோற்கடித்தது போலவே தெற்கிலே பாதாள உலகை கட்டுப்படுத்தினோம். சட்டத்தை நிலைநாட்ட நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் விதிக்கப்படாத சட்டங்களை விதிக்காது விதிக்கப்பட்ட சட்டங்களை பாதுகாத்தல் என்ற அடிப்படையில் நாம் செயற்படுகிறோம். புதிய சட்டங்களை விதிப்பற்குப் பதிலாக நாங்கள் 30 வருடங்களாக இருந்து வந்த அவசரகால சட்டத்திற்கு முடிவு கட்டினோம். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுகின்ற போது ஊடகங்கள் எவ்வளவு தடைகளை ஏற்படுத்தியபோதும் நாங்கள் ஊடகங்களை அடக்கும் சட்டங்களைக் கொண்டுவரவில்லை. வேறு நாடுகளுக்கு அடிபணிந்து சமாதானத்திற்கு எதிராக நாட்டுக்கு துரோகம் இழைக்கும் ஊடகங்களுக்குக்கூட இந்நாட்டில் கதவுகள் திறக்கப்பட்டே இருந்தது.

அன்பர்களே,

நாங்கள் பிரதேச சபைகள், மாகாண சபைகள், பொதுத் தேர்தல், சனாதிபதி தேர்தல்களை நடாத்தியதன் காரணமாக இன்று கீழ்மட்ட சனநாயக நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி பதவி வரை வடக்கு, கிழக்கு தெற்கு என எல்லா இடங்களிலும் மக்கள் கருத்து பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது.

எனவே, எங்களது போட்டி பச்சை நீலம் என்பதோ, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்பதோ அல்ல என்பதையும் எமது போட்டி நாட்டின் மீது அன்பு செலுத்துகின்றவர்களுக்கும் நாட்டுக்கு துரோகமானவர்களுக்கும் இடையிலானதாகும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அன்பர்களே!

தற்போது எமது நாட்டில் எல்லா சமயங்ளையும் பின்பற்றும் பல்வேறு மொழிகளைப் பேசும் எல்லோரும் இன்று ஒரு ஐக்கியமிகுந்த தேசமாக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க பாதையில் பயணிக்கின்றனர். எல்லா நாடுகளும் எமது இந்த சனநாயக பயணத்திற்கும் அபிவிருத்திக்கும் தேசிய சுதந்திரத்தைப் உறுதிப்படுத்தவும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தவும் எம்முடன் கைகோர்க்குமாறு நான் அன்புடன் அழைக்கிறேன்.

நண்பர்களே,

இதற்கு முன்னர் சுதந்திர தினத்தில் நான் நினைவுப்படுத்திய சுதந்திரத்தின் பெறுமதியைப்பற்றி சொல்கின்ற புத்தபெருமானின் போதனையை இன்றும் இந்த உலகுக்கு நினைவுபடுத்த வேண்டியது கடமையாகும். எமது புத்தபெருமானார் அம்பட்ட என்ற இளம் பிராமணருக்கு ஒரு பெண்குருவியை உவமையாக எடுத்து பெறுமதியான போதனையொன்றை வழங்கினார். சாணக்குருவி என்பது கமக்காரர் மண்ணை புரட்டுகின்றபோது மண்னுக்கு கீழே இருக்கின்ற குறுகிய இடத்தை கூடாக அமைத்துக்கொண்டு வாழ்கின்ற ஒரு பெண் குருவி. நமது கிராமப் பகுதிகளில் அந்த பெண் குருவியை கொமறித்தா என்று அழைக்கின்றனர். அல்லது சாணக் குருவி என்று அழைக்கின்றனர்.

லட்டுகிகாபி –கோ

அம்பட்ட சக்கே

குளாவகே

கா-மலா – பினி ஹோத்தி

சானக் குருவிக்கு கூட அதன் கூட்டில் அதற்கு தேவையான விதத்தில் வாழக்கூடிய உரிமை இருக்க வேண்டும். இலங்கைவாழ் மக்களும் அப்படித்தான். அதனால் எனது நாட்டு மக்களுக்கும் இந்நாட்டில் சுதந்திரமாக வாழ உரிமை இருக்க வேண்டும்.

உங்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகிறேன்.