அன்னதானத்தில் கலந்து கொண்டவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அவசர வேண்டுகோள்!!

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய அன்னதான மடத்தில் உணவு பரிமாறுபவருக்கு கொரோன தொற்று உறுதியானது.

செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் (8) ஆரம்பித்தது.

இதை முன்னிட்டு ஆலயச்சூழலில் உள்ளவர்கள், ஆலயத்துடன் தொடர்புடையவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கச்சான் வியாபாரிகள் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சந்நிதியின் மோகன் அன்னதான மடத்தின் உணவு பரிமாறுபவர், அந்த மண்டபத்தின் எதிரில் கச்சான் வியாபாரத்தில் ஈடுபடுவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 6ஆம் திகதி சந்நிதி ஆலயத்தில் பெருமளவான பக்தர்கள் குவிந்திருந்தனர். அவர்களில் பலர் மோகன் அன்னதான மடத்தில் அன்னதானத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தங்கியுள்ள யாசகர்களிற்கு உணவு பொதி செய்து வழங்கும் அனுமதி மாத்திரம் மோகன் மண்டபத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், அதை துஷ்பிரயோகம் செய்த அந்த மண்டபத்தினர், பெருமளவானவர்களை உள்ளே அனுமதித்து, முகக்கவசமுமின்றி- சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல்- அன்னதானம் வழங்கினர்.

அந்த பகுதியில் நின்றவர்களால் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு தொலைபேசி வழியாக முறையிடப்பட்டதை தொடர்ந்து, பொதுச்சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையில் சென்ற சுகாதார பிரிவினர், அங்கு பெருமளவானவர்கள் குவிந்திருந்ததையும், முகக்கவசம் அணியாமலிருந்ததையும் அவதானித்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றி, மண்டபத்திற்கு 14 நாட்கள் சீல் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், அந்த மண்டபத்தில் உணவு பரிமாறியவருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகியுள்ளது.

அந்த மண்டப நிர்வாகத்தினர் சமூகப் பொறுப்பு துளியுமின்றி, கொரோனா பரவலிற்கு காரணமாக அமைந்துள்ளனர்.

அன்றைய அன்னதானத்தில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். கலந்து கொண்டவர்கள் பற்றிய எந்த விபரமும் மண்டப நிர்வாகத்திடமில்லை. அன்னதானத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காண வழியில்லாததால், பெரும் அபாயம் எழுந்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி செல்வச்சந்நிதி முருகன் ஆலய மோகன் மண்டபத்தில் அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள், ஒளிந்து கொள்ளாமல், தத்தமது பகுதி சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அன்று அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள் தமது அடையாளங்களை மறைத்தால் குடாநாடு பெரும் அபாயத்தை சந்திக்கலாமென சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் பெற்றப்பட்ட பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் 35 மாதிரிகளின் முடிவுகள் சந்தேகத்திற்கிடமானவையாக காணப்பட்டது. அவை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor