சுவிஸர்லாந்து கிறிஸ்டா மார்க் வெல்டருக்கும், இரா. சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டருக்கும் – ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

swiss

சுவிஸர்லாந்தில் அரசியல் தஞசம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்த சுவிஸர்லாந்து அரசு தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டர் இன்று ஸ்ரீலங்காவின் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பதிய அரசியல் சாசன தயாரிப்புப் பணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சவிஸர்லாந்து சபாநாயகர், எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது, சுவிஸ்ர்லாந்தில் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு குறித்தும், ஸ்ரீலங்காவில் இடம்பெறும் புதிய அரசியல் சாசனத் தயாரிப்புப் பணிகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த சம்பந்தன், சுவிஸர்லாந்தில் மிகச் சிறந்த அரசியல் யாப்பொன்று நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்ததுடன், புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் போது, சுவிஸர்லாந்து யாப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சுவிஸர்லாந்து அரசியல் யாப்பில் நன்மை பயக்கும் பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவர், அதன் மூலம் சகல இன மக்களும் ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருவதுடன், சுவிஸர்லாந்தும் பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறையிலும் அபிவிருத்தி அடைந்ததற்கும் அதுவே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய சந்திப்பின் போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலமைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டுள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர், தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் தொடர்பிலும் வினவியுள்ளார்.

அதுமாத்திரமன்றி தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அவர் கலந்துரையாடியிருக்கின்றார். சுவிஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்தத் தீர்மானித்துள்ள அந்நாட்டு அரசு அது தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இந்தவாரம் உடன்படிக்கையொன்றிலும் கைச்சாத்திட்டிருந்தது.

இந்த நிலையிலேயே நாடு கடத்தப்படும் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பில் சுவிஸர்லாந்து சபாநாயகர், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடியிருக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor