சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில், கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்கள் தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார்.

சுன்னாகம் மின்சாரசபை வளாக நிலத்தில், வெறுமனவே ஊற்றப்பட்ட கழிவு எண்ணெயானது சுற்றாடலிலுள்ள கிணறுகளில் கலந்துள்ளது. முன்னர், அருகிலுள்ள கிணறுகளுக்கு பரவிய இந்த கழிவு எண்ணெய், பின்னர் மின்சார சபை வளாகத்தைச் சூழவுள்ள 5 கிலோமீற்றர் பகுதியிலுள்ள கிணறுகளுக்கும் பரவியது.

இதனால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய 250இற்கும் மேற்பட்ட கிணறுகளின் நீரில் கழிவு எண்ணெய் கலந்து, நீர் மாசடைந்துள்ளது. இந்நீரைப் பருக முடியாது என்பதுடன், குளிப்பதற்கு கூட பயன்படுத்த முடியாது. ஏனெனில், சரும நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றை இந்த கழிவொயில் நீரானது ஏற்படுத்தும்.

இந்த தாக்கம் குறித்த, விசாரணைகளை உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, வடமாகாண விவசாய அமைச்சு, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உள்ளிட்ட பலதரப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணற்று நீரை பரிசோதனை செய்து பார்த்த போது, அதில் 30 மில்லிகிராமிற்கும் அதிகமாக எண்ணெய்ச் செறிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதி மக்களுக்கான குடிநீர் வழங்கலை உடுவில் பிரதேச சபை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், மல்லாகம் நீதிமன்ற வளாகத்திலுள்ள கிணற்றிலும் எண்ணெய் கலந்தமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அது தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்கின் பிரதிவாதியாக இலங்கை மின்சார சபையின் நொதர்ன் பவர் நிறுவனம் மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிணற்று நீரில் எண்ணெய் கலந்தமை தொடர்பில் உரிய அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சட்ட ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட மக்களில் 11 பேர் மல்லாகம் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (10) வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் இந்த வழக்கை அடுத்த விசாரணைக்காகவும், கட்டளைக்காகவும் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.