சுன்னாகம் கழிவு எண்ணெயால் நிலத்தடி நீர் பெருமளவு பாதிப்பு

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து நிலத்துக்கடியில் கசிந்து குடிதண்ணீருடன் கலந்த கழிவு எண்ணெயால் காங்கேசன்துறை வரையிலான குடிதண்ணீர் கிணறுகள் பாதிக்கப்படபோகின்றன.

இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்த குழு இதனைக் கண்டறிந்துள்ளது. சுன்னாகம் முதல் வடக்கே காங்கேசன் துறை வரையிலான குடிதண்ணீர் படுக்கையை இந்தக் கழிவு எண்ணெய் நாசப்படுத்துவதைத் தடுக்க முடியாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலக்கீழ் தண்ணீரில் மேற்படையாகப் படிந்திருக்கும் கழிவு எண்ணெய் அப்படியே நகர்ந்து கடல் நீருடன் போய்க் கலந்தால் அந்தக் குடிதண்ணீர் படுக்கையைச் சுத்திகரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு எண்ணெய் படிவு கலந்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் மக்களுக்கு நீண்டகால நோக்கில் புற்றுநோய் பாதிப்பையும் தோல் வியாதிகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தத் தண்ணீரால் மலட்டுத் தன்மை அதிகரிக்கும் அபாயமும் உண்டு என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

எனினும் இவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க மேலதிக ஆய்வுகளும் சோதனைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி மக்கள் குடிதண்ணீரை அதற்குரிய முறையில் வடிகட்டிப் பயன்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகின்றது. இதுவரையில் 5 கிராம சேவையாளர் பிரிவில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்கரை வரையிலுள்ள கே.கே.எஸ் வீதியிலுள்ள கிராமங்கள் விரைவில் பாதிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.