இலங்கையின் 73ஆவது சுதந்திர நாள் நேற்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கு – கிழக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள், இலங்கை சுதந்திரமடைந்ததை நினைவு கூரும் வகையில் நேற்று காலை 8.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேசியக்கொடியேற்றல், மற்றும் இராணுவ அணிவகுப்புகள் என்பன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றள்ளன.
இலங்கை படைபலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் போர்த்தளபாடங்களைக் காட்சிப்படுத்தும் இராணுவ அணிவகுப்பும் சுதந்திர நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக இடம்பெற்றது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தமிழ் மக்களுக்கான உரிமைகள், சுதந்திரம் கிடைக்காத நிலையே தொடர்கிறது.
இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும், தற்போதைய அரசு சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையை மறுப்பதைக் கண்டித்தும், இன்றைய நாளை துக்கநாளாக கடைப்பிடிக்க வடக்கு – கிழக்கில் பலவேறு போராட்டங்கள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதிகேட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டம் பொத்துவிலில் ஆரம்பமாகி மட்டக்களப்பை வந்தடைந்தது. அந்தப் போராட்டம் நேற்று காலை மட்டக்களப்பு தாழங்குடாவில் ஆரம்பமாகி திருகோணமலையில் நிறைவடைந்தது. அதில் பல நூற்றுக் கணக்காணோர் கறுப்புப் பட்டியுடன் பங்கேற்றனர்.
அதேவேளை, நேற்றைய நாளை கறுப்புநாளாக கடைப்பிடிக்க வடக்கு – கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்கள் கடந்த 3 நாள்களாக உணவுதவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கறுப்புப் பட்டி போராட்டத்தை நேற்று முற்பகல் 10 மணிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படுகிறது. இந்தப் போராட்டதில் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.