சுகாதார சேவை சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் இல்லை – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Ketheeswaranயாழ். மாவட்ட சுகாதார திணைக்களத்தில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் எதுவும் இல்லையெனவும் அவ்வாறு வெற்றிடங்களை ஏற்படும் போது பகிரங்கமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு சுகாதாரத் தொண்டர்களில் தகைமை உடையவர்கள் சேவைக்காலத்தின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் கடந்த வியாழக்கிழமை திகதி முதல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் முன்னாள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களைக் கலைந்து செல்லுமாறும் இல்லையேல் கைது செய்யப்படுவீர்கள் என பொலிஸாரினால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி ஊழியர்களின் நியமனம் தொடர்பாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரினால் அறிக்கையொன்று இன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ்.மாவட்டத்தில் 2005ஆம் ஆண்டு சிற்றூழியர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்ற போது, சுகாதாரத் தொண்டர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 205 சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இவ்வருடம் ஜுன் மாதம் யாழ். மாவட்டத்தில் நிலவிய சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களுக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 94 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

தற்போது யாழ்.மாவட்டத்தில் 258 பேர் சமூக சுகாதார பணியாளர்களாக மாதாந்தம் ரூபா 6 ஆயிரம் ஊக்குவிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட சுகாதார திணைக்களத்தில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் எதுவும் இல்லாத நிலையில் மேலதிக ஆளணியை உருவாக்கி வெற்றிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதி கிடைத்ததும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆகவே சுகாதாரத் தொண்டர்கள் பணியாற்றியவர்கள் தாங்கள் பணியாற்றிய சுகாதாரப் பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகரிடமிருந்து சேவைக்காலத்தினை உறுதிப்படுத்தி அத்தாட்சிக் கடிதமும், அவர்கள் தொண்டர்களாக கடமையாற்றிய போது பயன்படுத்தி வந்த கையேடுகளும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தத்தமது பிரிவு சுகாதார வைத்தியதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும்.

தொடர்ந்து, யாழ்.மாவட்டத்தின் 12 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் சேர்த்து பொதுவான பெயர் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு, அது பகிரங்கமாக பிராந்திய சுகாதாரப் பணிமனையில் காட்சிப்படுத்தப்படும். அதன்போது அது தொடர்பான ஆட்சேபனைகள் உள்வாங்கப்பட்டு திருத்தப்பட்ட பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்தத் திருத்திய பட்டியல் வடமாகாண சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும். எதிர்காலத்தில் சுகாதார தொண்டர்களிலிருந்து உள்ளீர்ப்பு செய்யப்படும் போது இந்த முன்னுரிமைப் பட்டியல் கவனத்திலெடுத்தே நியமனங்கள் வழங்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.