சிற்றூழியர் நியமனங்களில் அரசியல் தலையீட்டிற்கு இடமில்லை

வட மாகாண சுகாதார அமைச்சின் சிற்றூழியர் நியமனங்களில் அரசியல் தலையீட்டிற்கு இடமளிக்கப்படமாட்டாது’ என வட மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகபிரிவு வியாழக்கிழமை(7) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
வடமாகாண சுகாதார அமைச்சில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுகிறது. வைத்திய நிபுணர்களிலிருந்து சாதாரண சிற்றூழியர்கள் வரை பற்றாக்குறையுள்ளது.

தற்போது படிப்படியாக இவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றோம். வட மாகாணத்தில் நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றியவர்களில் சிலருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நேர்முகப்பரீட்சைகள் ஏற்கனவே சம்மந்தப்பட்ட மாவட்ட சுகாதார பணிப்பாளர்களினால் நடாத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கான நியமனங்களில் எந்தவித அரசியல் தலையீட்டிற்கும் இடமளிக்கப்படமாட்டாது.

எதிர்காலத்தில் மேலும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு மத்திய முகாமைத்துவ சேவைகள் பிரிவிலிருந்து அனுமதி கிடைத்துள்ளது. எனினும் கடந்தகாலங்கள் போலல்லாது பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்ட பின்னர் முறையாக நேர்முகத்தேர்வுகள் நடாத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும்.

எனினும் சில அரசியற் கட்சியினர் வடமாகாண சுகாதார அமைச்சில் நியமனங்கள் பெற்றுத்தருவதாக மக்களை ஏமாற்றி பெயர்களை பதிவுசெய்துவருவதாக அறியமுடிகிறது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மாகாண சுகாதார அமைச்சு எந்தவிதத்திலும் பொறுப்பேற்கமாட்டாது’ என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor