சாட்சிகளை அச்சுறுத்தினால் சட்ட நடவடிக்கை

missing_people_enquiry_005காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களுக்கு வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணக தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப்பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதன்படி கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடைபெற்றது.

இதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இன்றையதினம் சாட்சியம் அளித்தவர்களில் அதிகளவானவார்கள் இராணுவம், புலனாய்வு பிரிவினர், ஈபிடிபி ஆகியோரை சாடியுள்ளனர்.

எனவே எதிர்காலத்தில் இவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் அவர்களுடைய பாதுபாப்புக்கு ஜனாதிபதி ஆணைக்குழு என்ன நடவடிக்கையினை மேற்கொள்ளும் என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதலளிக்கும் போதே ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

சாட்சிகளை பாதுகாக்கும் சட்ட மூலம் நாடாளுமன்றின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அங்கீகாரம் வழங்கப்படும் இடத்து அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் நஷ்ட ஈடுகளும் வழங்கப்படும்.

அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாறாக சாட்சிகளை நாம் விசாரணை செய்த பின்னர் அவர்களை அச்சுறுத்துவது என்பது சட்டத்திற்கு முரணானது. எனவே எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

எனவே அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தினால் எமது செயற்பாட்டினை நிந்தித்தல் என்ற சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கையும் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்.

மேலும் கற்றுக்கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்கியவர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் எதுவிதமான விடயமும் இதுவரை அறியவில்லை என்றும் இதுவே முதல்முறை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இராணுவம் மற்றும் ஏனைய ஈபிடிபி உள்ளிட்டர்களுக்கு என விசேட ஆணைக்குழு தனித்தனியாக நிறுவி விசாரிக்கப்பட மாட்டாது எனினும் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்து நிபுணத்துவம் கொண்ட மேலதிக குழு ஒன்று உருவாக்கப்பட்டு கிடைத்த தரவுகள் கொண்டு குற்றம் நிரூபிக்கப்படும்.

எனினும் இதற்கான காலம் திட்டவட்டமாக கூறமுடியாது எனினும் இப்போது எதிர்கால எமது நடவடிக்கைகளுக்காக சுருக்க அறிக்கை ஒன்றினையும் சமர்க்கின்றோம் என்றார்.