சவுக்குமரக் காடு பாதுகாப்புத் திட்டம்

வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப்பகுதியில் உள்ள சவுக்குமரக்காட்டைப் பாதுகாக்கும் திட்டம் ஒன்றை வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு முன்னெடுத்துள்ளது.

1

இதற்கான தொடக்க நிகழ்ச்சி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.08.2014) குடத்தனை சுடரொளி கிராம முன்னேற்றச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

10

1976 ஆம் ஆண்டு பருத்தித்துறைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் க.துரைரத்தினத்தின் நிதி ஒதுக்கீட்டில் 5ஏக்கர் அளவில் உருவாக்கப்பட்ட சவுக்கம் காடு, அதன் பின்னர் காலத்துக்கு காலம் விரிவுப்படுத்தப்பட்டு இன்று 8 கீலோமீற்றர் நீளத்தில் 1000 ஏக்கருக்கும்; அதிகமான பரப்பளவில் காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தச் சவுக்குக்காடு, அதன் பின்னர் விறகுக்காகவும், அலங்காரத் தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டு வருகின்றது. மண்ணரிப்பு மற்றும் கடற்கோள் போன்றவற்றின் தாக்கங்களில் இருந்து வடமராட்சி கிழக்கைப் பாதுகாக்கவல்ல சவுக்குமரக்காடு வெறுமனே விறகுக்காக அழிக்கப்பட்டு வருவதாகப் பலரும் சுட்டிக் காட்டியதையடுத்தே தற்போது சவுக்குமரக்காடு பாதுகாப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

9

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு, ஆறுதல் ஸ்ரீலங்கா, மத்திய அரசின் வனவளத் திணைக்களம் ஆகிய மூன்றும் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்துக்கான நிதியுதவியை எதிர்காலத்துக்கான கண்டல்கள் என்ற சர்வதேச நிறுவனம் வழங்கியுள்ளது.

4

இத்திட்டம் சவுக்குமரக்காட்டை பாதுகாக்கும் அதேசமயம், முதிய மரங்களைத் தேர்வுசெய்து உரிய முறையில் களைவதன் மூலம் காட்டின் பொருளாதரப் பயன்களை மணற்காடு மற்றும் குடத்தனைப் பகுதியில் வாழுகின்ற மக்கள் அனுபவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளதாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

2

தற்போது விறகு வியாபாரிகளினால் களவாகச் சவுக்குமரங்கள் அழிக்கப்பட்டுவரும் அதேசமயம் சவுக்குமரக்காட்டில் விறகுகளை எடுப்பதற்கும் சிறிய சவுக்குமரக் கிளைகளைத் தறிப்பதற்கும் மணற்காட்டில் நிலைகொண்டிருக்கும் விசேட அதிரடிப்படையினரும் கிராம சேவையாளர்களின் சிபார்சின் அடிப்டையில் அனுமதி வழங்கி வருகின்றனர். விசேட அதிரடிப்படை அதிகாரியை சந்தித்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன்;, இனிமேல் சவுக்குமரக்காட்டில் இருந்து விறகுகளைப் பெறுவதற்கோ மரங்களைத் தறிப்பதற்கோ அனுமதி கேட்டு வரும் கடிதங்கள் இத்திட்டத்துக்கென நியமிக்கப்பட்டிருக்கும் இணைப்பாளரின் ஊடாக வடக்கு சுற்றாடல் அமைச்சுக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், உரிய பரிசீலனையின் பின்னர் அதற்கான அனுமதியை வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சே வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச. சுகிர்தன், பருத்தித்துறை பிரதேசசபைத் தலைவர் பூ. சஞ்சீவன், வனவளத் திணைக்கள அதிகாரிகளான கே.யோகரட்ணம், கே.எஸ் குமார, விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் க. விஐயரத்தினம் மற்றும் கிராம சேவையாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.