சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்- ருவன் வணிகசூரிய

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

army-ruwan-vanikasooreya

இலங்கைக்குள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் அடியோடு அழிக்கப்பட்டாலும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது.

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் ஆனால் தமிழ் மக்கள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தவறான பாதையை தெரிவு செய்ய மாட்டார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இலங்கைக்குள் இல்லை. யுத்த காலக்கட்டத்தில் இலங்கை பல அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்த போதும் தற்போது தேசிய அளவில் இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் எவையும் இல்லை.

எனினும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டிருப்பது இலங்கையில் மட்டுமே சர்வதேச அளவில் இவர்களின் செயற்பாடுகள் இன்னமும் நடைபெற்று வருகின்றது.

யுத்த காலக்கட்டத்தில் சர்வதேசத்தில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகளின் அமைப்புகளும் அதன்பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களும் இன்று மேற்கத்தேய மற்றும் மத்திய நாடுகளில் இருந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்கின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையை சர்வதேச பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க நாம் நாட்டில் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளோம். அத்தோடு சர்வதேச பாதுகாப்பு செயற்பாடுகளுடனும் நாம் நல்ல முறையில் செயற்படுகின்றோம்

நாட்டில் மீண்டும் குழப்பத்தினை ஏற்படுத்தும் முயற்சிகளை கையாள்கின்றனர். எது எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பட்ட இன்னல்களை இன்னமும் மறக்கவில்லை.

எனவே, அவர்கள் இப்போது பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் செயற்படுகின்றனர். இனியொருபோதும் அவர்கள் பயங்கரவாதத்தினை ஆதரிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.