‘சம்பந்தரிடமோ, த.தே.கூ.விடமோ இனியும் ஏமாறோம்’- தமிழ் அரசியல் கைதிகள்

கடந்த காலங்களில், அனைத்துத் தரப்பினரும் எம்மை ஏமாற்றிவிட்டனர். அதனால், இனியும் எவரிடத்திலும் நாம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், எமது இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை’ என்று கொழும்பு மெகசின் சிறைச்சாலையில், உண்ணாநிலைப் போராட்டமொன்றை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு போராட்டம் நடத்திவரும் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.

கடந்த 16 தினங்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களின் இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்துவதற்காகவே, ஸ்ரீதரன் எம்.பி, அங்கு சென்றிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, ‘கைதிகள் தங்களது உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை தொடர்பிலும் ஸ்ரீதரன் எம்.பி.யால் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், அவர்கள் அந்த கோரிக்கையை மறுத்துள்ளனர்.

‘கடந்தமுறை நாங்கள் இவ்வாறானதொரு உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சிறைச்சாலைக்கு வருகை தந்து, போராட்டத்தைக் கைவிடுமாறும், இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு, தீர்வு பெற்றுக்கொடுப்பார் என்றும் உறுதியளித்துச் சென்றார்.

ஆனால், இதுவரையில் எமது பிரச்சினைகளுக்குத் தீர்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அவரது பேச்சைக் கேட்டு நாம் அன்றைய போராட்டைத் கைவிட்டோம். ஆனால் இம்முறை, அவ்வாறு செய்ய மாட்டோம்’ என்று மேற்படி கைதிகள் கூறியதாக ஸ்ரீதரன் எம்.பி குறிப்பிட்டார்.