ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து மனோகணேசன் என்னை இடைநிறுத்தியுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறியக்கிடைத்தது. இதனை வெற்றிகரமாக என்னால் நீதிமன்றில் எதிர்க்கமுடியும் பாசிசவாத தலைமையுடன் தொடர்ந்தும் என்னால் பணியாற்ற இயலாது என நான் கருதுவதால், குறித்த சட்டநடவடிக்கைகளின் பயனின்மையைக் கருத்திற்கொண்டு அவற்றை எடுப்பதைத் தவிர்க்கிறேன் என்று குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
குறித்த இடைநீக்கமும், பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கலும் சட்ட ரீதியாகப் பிழையானது. இது போன்றதொரு முடிவெடுப்பதற்கான கூட்டம் இரவோடிரவாக கூட்டப்படமுடியாது, மாறாக குறித்த கால அவகாசத்தில் அரசியல் குழுவிலுள்ள யாவருக்கும் முறையான அழைப்பும், குறித்த பிரேரணை தொடர்பான முறையான அறிவித்தலும், நிகழ்ச்சிநிரலும் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கட்சியின் பிரதித் தலைவரும், அரசியல் குழு உறுப்பினருமான எனக்கும் கூட்டத்திற்கான அறிவிப்பும், பிரேரணை தொடர்பான அறிவித்தலும் அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும். முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது எடுக்கப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை சட்டரீதியாகச் செல்லுபடியற்றது.
இதனை வெற்றிகரமாக என்னால் நீதிமன்றில் எதிர்க்கமுடியும் ஆயினும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை ஜனநாயகப் பண்பு இல்லாத, ஒரு பெண்மணிக்காக இந்தக் கட்சியை வளர்க்க துணைநின்ற என்னைத் தூக்கியெறியும் பாசிசவாத தலைமையுடன் தொடர்ந்தும் என்னால் பணியாற்ற இயலாது என நான் கருதுவதால், குறித்த சட்டநடவடிக்கைகளின் பயனின்மையைக் கருத்திற்கொண்டு அவற்றை எடுப்பதைத் தவிர்க்கிறேன்.
ஒரு கட்சியின் பிரதித் தலைவர் கூட ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பதற்கும், நியாயமான கருத்துக்களைச் சொல்வதற்கும், உண்மையைப் பேசுவதற்கும் கட்சித் தலைமையிடம் அனுமதி பெறவேண்டும் என்கிற சர்வாதிகாரப் போக்கு எந்த ஜனநாயகக் கட்சியிடமும் இல்லை. உண்மையைச் சொல்வதற்காக என்னை கட்சியிலிருந்து நீக்குவது எவ்வகையில் நியாயமானது? இதுபோன்ற அடிப்படை ஜனநாயகப் பண்பைக் கூட மதிக்காத பாசிசத் தலைமைகளுடன் எவ்விதம் அரசியல் செய்ய முடியும்?
உறுதியான நம்பிக்கையுடையவன்
முதலாவதாக நான் இந்தக் கட்சியில் இணைந்து கொண்ட வரலாற்றை இங்கு தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். கொழும்பிலே தமிழர் பிரதிநிதித்துவம் என்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்று. சேர். பொன். அருணாச்சலம் இலங்கை தேசிய காங்கிரஸ் தலைமைத்துவத்திலிருந்து விலகக் காரணமானது கொழும்பில் தமிழருக்கென வழங்க உறுதியளித்த பிரதிநிதித்துவத்தை வழங்காமையே ஆகும்.
நான் எனது தலைவர் மாமனிதர். குமார் பொன்னம்பலத்தின் வழியில் அரசியலுக்கு வந்தவன். தமிழ்தேசிய அரசியல் பாசறையில் வளர்ந்தவன், கொள்கை வழி அரசியலில் உறுதியான நம்பிக்கையுடையவன். குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டபின்னர் பலத்த அச்சுறுத்தலுக்கும், கொலைமிரட்டலுக்கும் மத்தியிலும் தலைநகரிலிருந்து தமிழர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவன்.
பிரதிநிதித்துவத்தை பாதிக்கும்
மனோ கணேசன் 2000ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்று நாடாளுமன்றம் செல்ல முடியாது நேர்ந்தபோது, அந்தச் சோகத்தை என்னோடு பகிர்ந்து கொண்ட பொழுது, தலைநகரில் தமிழர் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டுமெனின் ஒற்றுமை அவசியம் என்பதை உணர்ந்து கொண்டதன் பேரிலே மனோவுக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தேன். வாக்குகள் சிதறடிக்கப்படுவது எமது பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என கொள்கைப் பிடிப்புடன் அன்று மனோவுக்கு தார்மீகரீதியான எனது ஆதரவைத் தந்திருந்தேன்.
நான் உறுதியாக நம்புகிறேன்
தொடர்ந்தும் தலைநகரிலிருந்த தமிழர் குரல் ஒலிக்கவேண்டும் என அன்று தம்பிகளும் விரும்பிக்கொண்டதற்கிணங்க நான் மேல் மாகாண மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டேன், பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டேன், பின்னர் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.
பிழையை பிழை என்று தைரியமாகச் சொல்லும் நேர்மையையும், தைரியத்தையும் நான் அண்ணன் குமார் பொன்னம்பலத்திடமிருந்து கற்றுக்கொண்டேன். தவறு நடந்தால், அதைத் தவறு என்று சுட்டிக்காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேல் மாகாண மக்கள் முன்னணியாக, பின் மேலக மக்கள் முன்னணியாக, பின் ஜனநாயக மக்கள் முன்னணியாக தலைநகர் தமிழருக்கு அடையாளம் தரும் கட்சியாக எங்களுடைய கட்சியை வளர்த்ததில் மனோ கணேசனுடையது மட்டுமல்லாது சகலருடைய பங்கும் முக்கியமானது.
அரசியலுக்கு வந்தவன் அல்ல
எந்த ஒரு பெரு வெற்றியும் தனிநபர்களால் அடையப்பெறப்படுவதல்ல, மாறாக அது ஒரு கூட்டு முயற்சி. படிப்படியான எம்முடைய வளர்ச்சியில் மனோவின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தவிர்த்து நாம் 4 மாநாகரசபைப் பிரதிநிதித்துவம், பின்னர் 3 மாகாண சபைப் பிரதிநிதித்துவம் என்று தலைநகரில் தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தும், எமது மக்களுக்கு நேர்மையாக சேவைசெய்தும் வந்துள்ளோம்.
நான் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. 1981ம் ஆண்டு முதல் அண்ணன் குமார் பொன்னம்பலத்துடன் இணைந்து பல தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறோம். எனது 35 வருட கால அரசியலில் பதவியிலிருந்தது வெறும் 8 வருடங்கள் தான். பதவி என்பது எங்கள் பாசறையில் வளர்ந்தவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.
பலவழிகளில் ஒரு வழியே
மேல்மாகாண மக்கள் முன்னணி ஊடாகப் போட்டியிட்டு முதலில் கொழும்பு மாநகரசபையிலும், பின்னர் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு மாகாண சபையிலும் பதவி வகித்திருந்தேன். என்னைப் பொருத்தவரை பதவி என்பது மக்களுக்கு சேவை செய்யும் பலவழிகளில் ஒரு வழியே அன்றி, அதுவே அரசியலின் ஒற்றை இலக்கல்ல.
இன்றைக்கு என்மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு நான் பகிரங்கமாக கட்சியையும், கட்சித் தலைவரையும் குறைசொல்கிறேன் என்றும், பதவிக்காகவே இதைச் செய்கிறேன் என்றும், அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுகிறேன் என்றும் சொல்கிறார்கள். இவற்றில் துளியும் உண்மையில்லை. நான் கட்சியையோ, கட்சியின் தலைவரையோ குறை சொல்லவில்லை, மாறாக கட்சியிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டுகிறேன்.
ஆசனத்தை வழங்கியது ஏன்
கடந்த மாநகரசபைத் தேர்தலில் தமிழர் வாக்குகள் தமிழர்களுக்கே என்று முழக்கமிட்டு தேர்தலிலே வெற்றிபெற்ற மனோ கணேசன், அந்தப் பதவியை இராஜனாமாச் செய்துவிட்டு பட்டியலிலே அடுத்தடுத்ததாக இருந்த அதிக வாக்குகள் பெற்ற பல தமிழர்களைப் புறக்கணித்து விட்டு பட்டியலில் பின்தங்கியிருந்த பிரியாணி குணரட்ண என்ற பெண்மணிக்கு தன்னுடைய ஆசனத்தை வழங்கியது ஏன்? இது பெரும் அநியாயம்.
இது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா. ஒருவேளை இது தமிழ்-சிங்கள உறவை வெளிப்படுத்தும் முறை என்று மனோ கணேசன் இன்று வியாக்கியானம் கூறுவது போல உண்மையாயின் அதை தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்திருக்கலாம் அல்லவா? மாறாக தமிழர் வாக்கு தமிழர்களுக்கே என்று கூறிவிட்டு பின்பு அதை மக்கள் ஆணைக்கெதிராக தாரைவார்த்தது தவறு.
இது நடந்த போது நான் கட்சியின் பொதுச்செயலாளர், என்னால் அந்த பெண்மணியை நியமிக்க கையெழுத்திட முடியாது என கூறியிருந்தேன், நான்கு நாட்களாக என்னை கடுமையாக வற்புறுத்தி மனோ கணேசன் கையெழுத்திட வைத்தார். அந்த சம்பவத்தின் பின்பு சிறிது காலத்திலேயே என்னுடைய பொதுச் செயலாளர் பதவியை பறித்து, தலைவர் பதவியுடன், பொதுச்செயலாளர் பதவியையும் தானே வைத்துக்கொள்வதாக மனோ கணேசன் அறிவித்துவிட்டு, என்னை எந்தவித பொறுப்புமற்ற ‘பிரதித் தலைவராக’ பெயரளவில் பதவி உயர்த்துவதாக அறிவித்தார்.
வழிபாட்டு அரசியலுக்கு தயாராக இல்லை
இவற்றை நான் சுட்டிக் காட்டுவது மனோ கணேசனுக்கு பிடிப்பதில்லை. ஆனால் இது பாசிச முன்னணியல்லவே. ஜனநாயக மக்கள் முன்னணி என்பதை மனோ கணேசன் புரிந்து கொள்ள வேண்டும்.
தன்னை விமர்சிப்பதே தவறு என்று மனோ கணேசன் நினைப்பாரானால் அவ்வகையான வழிபாட்டு அரசியலுக்கு குமரகுருபரன் தயாராக இல்லை.
மேலும் நான் இவற்றை, தேர்தலுக்கு பின் சொல்லவில்லை. தேர்தலுக்கு முன்பே சொல்லிவிட்டேன். எனக்கு பதவி ஆசை என்கிறார்கள். பதவி ஆசை எனக்கிருக்குமானால், இன்று உள்ளவர்களைப் போல மனோ கணேசனுக்கு ஒத்தூதி, வழிபாட்டரசியல் நடத்தி எனது பதவியை என்னால் காப்பாற்றியிருக்க முடியும். அதற்கு இந்த குமரகுருபரன் தயாராகவில்லை.
பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவன்
அண்ணன் குமார் பொன்னம்பலம் வழியில் நேர்மையான வழி அரசியல் செய்தவன் நான், பதவிக்காக யாருக்கும் வக்காலத்து வாங்கத் தயாராக இல்லை. தமிழ் மக்கள் இதையே பெருமையாகக் கருதுவார்கள் என நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.
கூட்டுப்பொறுப்பு பற்றிப் பேசுகிறார்கள். தனி மனித முடிவுகளுக்கு ஏது கூட்டுப்பொறுப்பு. கூட்டாக எட்டப்படும் முடிவுகளுக்குத் தான் கூட்டுப்பொறுப்பு. என்னைப் பொருத்தவரை நான் தமிழ் மக்களுக்கு மட்டுமே பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவன். அதனால் தான் நேர்மையாக எனக்குத் தெரிந்த உண்மையை வெளிப்படையாகக் கூறிவிட்டேன். நான்கில் பாதி இரண்டு என்பதை சொல்லுவது தவறா? மனோ கணேசன் ஒன்றை மறந்துவிடக்கூடாது, தலைமையை எவ்வளவு விமர்சித்தாலும் சஜித் பிரேமதாஸ தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். அதுவே ஜனநாயகம். விமர்சனங்களை அழித்தொழிக்கும் பாசிஸம் அழிவுக்கே இட்டுச்செல்லும்.
தமிழர்கள் சிரிக்கிறார்கள்
நான் அரசாங்கத்துடன் சேர்ந்துவிட்டேன் என்று வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். என்னை அறிந்த தமிழர்கள் இதைக்கேட்டுச் சிரிக்கிறார்கள். எனக்கே கடுமையான சிரிப்பு வந்தது. தமிழர்களுக்கு இத்தனை இன்னல்களை விளைவித்த இந்த அரசாங்கத்திற்கு குமரகுருபரன் ஒரு போதும் ஆதரவளிக்கமாட்டான். இதை எம் மக்கள் ஒரு உறுதி மொழியாகவே எடுத்துக்கொள்ளலாம்.
இது மனோ கணேசன் வழங்குவது போல அடுத்த நொடியே காற்றில் கரைந்து மறைந்து போய்விடும் உறுதிமொழி அல்ல. மாறாக கொள்கைப்பற்றுமிக்க அரசியல் பாசறையில் வளர்ந்த ஒருவனின் உறுதிமொழி. மேலும் நான் அரசாங்கத்துக்கு ஆதரவாக மனோவை வீழ்த்த சதி செய்கிறேனாம் என்கிறார்கள். அரசாங்கத்தோடு சதி செய்வது மனோ கணேசன் தான் என்ற சந்தேகம் என்னுள் நீண்ட நாளாக இருக்கிறது.
அரசாங்கத்தை எதிர்க்க பொது எதிரணியாக ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கெதிரான வாக்குகள் சிதறாது காப்பாற்றப்படவேண்டிய ஒரு காலகட்டத்தில், தனித்து கட்சியில் கேட்டு, வாக்குகளை சிதறடித்து, மேல்மாகாணசபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தையும் அரைவாசியாகக் குறைத்து இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக நடந்துகொண்டது யார்? தேர்தலுக்கு முன்பாக கட்சி நடத்திய கூட்டத்திலும் நான் தெளிவாகச் சொல்லியிருந்தேன், பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டாக கேட்பது மட்டுமே எமது பிரதிநிதித்துவத்தை காப்பதற்கான ஒரே வழி என்று.
மனோ கணேசன் செவி மடுக்கவில்லை
இந்தக் கருத்தையே அதே கட்சிக்கூட்டத்தில் வலியுறுத்தியவர்கள் இன்றும் கட்சியில் இருக்கிறார்கள். இதைப் பற்றி பலமுறை மனோ கணேசனிடம் தனிப்பட்ட முறையிலும் கூறியிருக்கிறேன். ஆனால் இது எதையும் மனோ கணேசன் செவி மடுக்கவில்லை. இதுவரை நான்காக இருந்த மேல்மாகாணத் தமிழர் பிரதிநிதித்துவத்தை இந்தத் தேர்தலின் பின்பு இரண்டாக குறைத்ததுதான் இன்று மனோ கணேசன் மார்தட்டிக்கொள்ளும் ‘மாபெரும் வெற்றி’. இந்த உண்மையைச் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? இதைச் சொல்வதற்குக் கூட ஒரு ஜனநாயகக் கட்சியில் உரிமை இல்லையா? இந்த உண்மையைச் சுட்டிக்காட்டினால் என்னைத் துரோகி என்கிறார். இவர்களைப் போன்றவர்கள் என்மீது வீசும் இதுபோன்ற பட்டங்களெல்லாம் என்னை பட்டாடையாகவே வந்தடைகின்றன ஏனெனில் என்னிடம் சத்தியம் இருக்கிறது. தர்மம் இருக்கிறது.
மனோ கணேசன் தனது அரசியல் வரலாற்றை மீளத் திரும்பிப் பார்த்துக்கொள்வது நல்லது. நாடாளுமன்றத்திற்கு மனோ கணேசன் சென்றதும், மாகாணசபைக்கு எமது கட்சியினர் அதிகளவில் தெரிவானதும் ஐக்கிய தேசிய முன்னணிக் கூட்டணியிலேயே அன்றி, தனித்துப் போட்டியிட்டு அல்ல. அன்று போலவே இன்றும் நாம் இதுபோன்ற கூட்டணியில் போட்டியிட்டிருந்தால் கூடுதலான தமிழர் பிரதிநித்துவம் பெறப்பட்டிருக்கும் என்று கூறுவது எந்த வகையில் தவறாகும்?
சரணாகதியடைவார்
இன்று தனித்துவம், தனிக்கட்சி என்று சொல்லும் மனோ கணேசன், நாளை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம்தான் சரணாகதியடைவார். இவ்விதமாக அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துதான் வெற்றிபெற முடியும் என்றால் நான் இன்று சொன்ன கருத்து எவ்வாறு தவறாக முடியும்? காலத்துக்கேற்ப கொள்கையை நீட்டி, முழக்கி அரசியல் செய்து மக்களை ஏமாற்ற எனக்குத் தெரியாது. எதையும் அவர் செய்தால், அவர் சொன்னால் தவறில்லை, நாம் செய்தால் தவறா? இது தான் ஜனநாயகமா?
கள்ளத் தொடர்பு
நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறேன் என்று சொன்னால் தமிழ் மக்களே சிரிப்பார்கள். குமரகுருபரன் யார், அவர் எங்கிருந்து வந்தவர். எந்த அரசியல் பாசறையில் வளர்ந்தவர் என்று தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிறந்தநாளுக்கா மஹிந்த அழைப்பெடுத்து வாழ்த்துகிறார்? இதை ‘கள்ளத் தொடர்பு’ என்று சொல்லுமளவிற்கு நான் நாகரீகமற்றவன் அல்ல. இதுபோன்ற குற்றச்சாட்டையே மகேஸ்வரனுக்கு எதிராக வைத்தார், இன்று எனக்கெதிராக வைக்கிறார், தன்னைவிட வேறு எந்த அரசியல் தலைமையும் தலைநகரில் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மனோ உறுதியாக இருக்கிறார் என்பதை இப்போது நான் அறிந்துகொண்டேன்.
அரசாங்கத்தோடு சேரமாட்டான்
இளைஞர்கள் வாருங்கள் என்று மனோ கணேசன் அறைகூவல் விடுவது புதிய படையணியை உருவாக்கவேயன்றி, புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு அல்ல. வெற்றிலைச் சின்னத்தில் தேர்தல் கேட்டுத் தோற்றுப்போனவர்களையும், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவரின் ஆலோசகராக இருந்தவர்களையும் இன்று பணத்திற்காக தன்னுடன் வைத்திருந்து அவர்களுக்கு பதவிகளைத்தாரை வார்க்கும் மனோ கணேசன் நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறேன் என்று கூறுவது அபாண்டம். நான் கொள்கையுடன் அரசியலுக்கு வந்தவன், எந்தத் தன்மானம் மிக்க தமிழனும் இந்த அரசாங்கத்தோடு சேரமாட்டான், அதற்கு ஆதரவாக நடக்கவும் மாட்டான். இது எல்லாம் என்னை அவமானப்படுத்த மனோ கணேசன் கட்டவிழ்த்துவிடும் விசமக் கருத்துக்கள் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.
நல்ல மனிதருக்கே அழகல்ல
எமது ஒற்றுமை குலைந்தவிடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக எத்தனை முரண்பாடுகள் ஏற்பட்டபோதும் நான் கட்சியிலேயே நீடித்திருந்தேன். பிழைகளைச் சுட்டிக்காட்டுவது எனது கடமை, அது நாம் எம்மைத் திருத்திக்கொண்டு சரியாக நடக்கவேண்டும் என்பதற்காக சொல்லியது. இது ஜனநாயகக் கட்சிகளில் சகஜம். அப்படிச் சொன்ன ஒவ்வொரு பொழுதிலும் கூட நான் கட்சியை விட்டுக்கொடுத்ததில்லை மாறாக இது எனது கட்சி நான் இங்கே தான் இருப்பேன் என்று உறுதியாகக் கூறியவன் நான். இதை ஒரு துரோகமாக வர்ணிப்பதே தவறு. தான் பிழைவிட்டால் கூட அதை யாரும் சுட்டிக்காட்டக் கூடாது என்று நினைப்பது பாசிச எண்ணம். பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டுமே அன்றி பிழைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை அழித்தொழிக்க நினைப்பது நல்ல தலைவருக்கு மட்டுமல்ல, நல்ல மனிதருக்கே அழகல்ல.
நான் தயாராகவில்லை
தேர்தலில் தோற்றவர்களை களையெடுக்க வேண்டுமென்று எனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறாராம் மனோ கணேசன். அப்படியானால் எவருடைய ஆலோசனையையும் செவிமடுக்காது கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே கண்டிக்குச் சென்று தோற்ற மனோ கணேசனையல்லவா முதலில் களையெடுத்திருக்க வேண்டும் என்பதை அவர் எப்படி மறந்தார்? தேர்தல் வெற்றி என்பது ஒரு அரசியல் தலைவனை உரசிப்பார்க்கப் பயன்படும் கல் அல்ல. மாமனிதர். குமார் பொன்னம்பலம் தேர்தல்களில் ஜெயித்தவர் அல்ல, அதனால் அவர் நல்ல அரசியல்வாதி இல்லை என்று ஆகிவிடுமா என்ன? அதே போல தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும் சிறந்த தலைவர்கள் ஆகிவிடுவார்களா என்ன? கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்து, மதுபானம் கொடுத்து வாக்குக் கேட்டுத்தான் வெல்ல வேண்டும் என்றால் அதைச் செய்ய நான் தயாராகவில்லை. மனச்சாட்சிக்கு நேர்மையாக, மக்கள் வழங்கிய ஆணைக்கு உண்மையாக அரசியல் செய்ய எனக்குத் தெரியும். வியாபார அரசியல் எனக்கு தெரியாது. அப்படிப்பட்ட வியாபார அரசியலின் முன் தோற்பது தவறல்ல மாறாக பெருமையானது.
ஒருவனுக்கு செய்யும் துரோகமாகும்
எனக்கு 14 நாள் அவகாசமும், என்னை கட்சியிலிருந்து நீக்க துரிதமும் காட்டும் மனோ கணேசன் இதுவரைகாலமும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் எவரையும் கட்சியிலிருந்து முற்றாக நீக்கியதாக வரலாறு இல்லை. இதை இப்போது மனோ கணேசன் செய்வாரானால் அது மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டதாகவே இருக்கும். அது அவருடைய ஆரம்பகால வளர்ச்சிக்கு துணைநின்ற ஒருவனுக்கு செய்யும் துரோகமாகும்.
மனோ கணேசன் இன்று போகும் பாதை, அவரையும், எமது கட்சியையும், தமிழ் மக்களையும் தவறான பாதையில் கொண்டு செல்கிறது. அதை நான் சுட்டிக் காட்டுவது மனோவுக்கு பிடிக்கவில்லை எனில், இனியும் அவருடனான இந்தப் பயணத்தில் என்னால் தொடரமுடியாது. இந்த அடிப்படையிலிருந்து கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் விலகிவிட்டார்கள் – இது எமது கட்சியை நன்கறிந்தவர்களுக்கு தெரியும். இன்று அவருடன் கூட இருப்பவர்களுக்கும் இது தெரியும். நான் மனச்சாட்சிக்கும், கடவுளுக்கும் பயந்தவன், இந்தப் பாதையில் என்னால் தொடர முடியாது ஆதலின் நான் இந்தக் கட்சியை விட்டும், அதன் உறுப்புரிமையிலிருந்தும், அதன் சகல பொறுப்புக்களிலிருந்தும் விலகுகிறேன். இது கடினமானதொரு முடிவு ஆனால் இனியும் மனோ கணேசனுடனான எனது அரசியலைத் தொடர்வது எனக்கும், தமிழ் மக்களுக்கும் ஏற்றதல்ல.
எனது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்
மனோ கணேசனுக்கு அவருக்கு வயதிலும், அரசியலிலும் மூத்தவராக, இதுவரை இருந்த நல்ல நண்பனாக நான் சொல்ல ஒரு அறிவுரையுண்டு. பெருஞ் சாம்ராஜ்யங்களெல்லாம் அதன் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அரசியலில் கலந்ததால் கவிழ்ந்திருக்கிறது. உங்கள் தனிப்பட்ட உறவுகளுக்கு நீங்கள் அரசியலை பயன்படுத்துவது, நீங்கள் உங்கள் மக்களை மட்டுமல்ல, உங்களையும் அழிவை நோக்கி இட்டுச்செல்லும் வழிமுறை ஆகும். தயவு செய்து இனியாவது சிந்தியுங்கள். மக்கள் உங்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், அவர்களை ஏமாற்றிவிடாதீர்கள்.
நான் மானமுள்ள தமிழன். தலைநிமிர்ந்து நிற்கும் தமிழர்தம் பாசறையில் வளர்ந்தவன், இந்த போக்கிலி அரசியல் தலைவர்கள் கட்டிவிடும் கட்டுக்கதைகளை தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள் என உறுதியாக எண்ணுகிறேன். அன்றும், இன்றும் போல என்றும் தமிழ் மக்கள் உள்ளங்களில் நான் இருப்பேன். எனது நேர்மையான அரசியல் தொடரும். தமிழினத்திற்காக எனது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்