சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள வீதியில், சுயநினைவற்று கிடந்த இளைஞனை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்தபோதே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கீரிமலை நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ம. ஜெனுசன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த இளைஞன் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த இளைஞன் நேற்றைய தினம் மரண சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்தவேளை, அங்கு சிலர் அவருடன் முரண்பட்டதாகவும்அவர்களே இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆகவே, கொலை சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து, கொலையாளிகளை கைது செய்யக் கோரி இளைஞனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor