கொலைச் சந்தேகநபருக்கு பரீட்சை எழுத அனுமதி

சாவகச்சேரி ஆதார வைத்திசாலையில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞருக்கு, தற்போது நடைபெறுகின்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்ற சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் மன்றில் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார். அதன்படி சந்தேகநபர், சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பின் கீழ், தனியான அறையில் பரீட்சை எழுதுகிறார்.

இதேவேளை, இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஜூலை மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தில் அல்லாரையைச் சேர்ந்த என்.அன்பழகன் (வயது 26) என்பவர் உயிரிழந்ததுடன், மேலும் 8பேர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மீசாலை ஆலயத் திருவிழாவொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பின் எதிரொலியாகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரில் இருவர், தாங்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இம்முறை தோற்றவுள்ளதாகவும் அதனால், தங்களுக்கு பிணை வழங்கும் படியும் தங்கள் சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் ஜூலை 22ஆம் திகதி கோரியிருந்தனர்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த நீதவான், அவ்வாறு பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் இருந்தால், அவர்களுடைய பரீட்சை அனுமதி அட்டையின் பிரதியினை மன்றில் சமர்ப்பித்து பரீட்சை நடைபெறும் தினங்களில் விசேட பாதுகாப்புடன் தனி அறையில் வைத்து பரீட்சை எழுதுவதற்கான ஒழுங்குகளை சிறைச்சாலை அதிகாரிகள் ஒழுங்கு செய்வார்கள் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, இரண்டு பேரில் ஒருவர் தன்னால் சிறையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றமுடியாது எனத் தெரிவித்து பரீட்சைக்கு தோற்றவில்லை. இருந்தும், மற்றைய நபர் உரிய ஆவணங்களை மன்றில் சமர்ப்பித்து, யாழ் நகரத்திலுள்ள கல்லூரியொன்றில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதி பெற்றுள்ளார்.