கொரோனோ தொற்றாளருடன் பயணித்தவர்களை இனம் காண நீதிமன்றை நாடியுள்ள பொலிஸார்

யாழில் கொரோனோ தொற்றுடன் தொடர்புடைய நபர்களுடன் பேருந்தில் பயணித்த ஆறு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை இனம் கண்டு தனிமைப்படுத்த யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றை நாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 30ஆம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என அறியப்பட்ட வெள்ளவத்தை உணவக உரிமையாளர், மற்றும் அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவரும் என நால்வர் NCG என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் மறுநாள் 26ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அங்கிருந்து உணவக உரிமையாளர் முச்சக்கர வண்டியில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். பணியாளர்களும் முச்சக்கர வண்டியில் வேலணை, புங்குடுதீவுக்கு புறப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட NCG என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் பயணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டது.

அத்துடன் பேருந்து சேவை நிறுவனத்திடமிருந்து பயணித்தவர்களின் அலைபேசி இலக்கம் பெறப்பட்டு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர். அவ்வாறு 37 பயணிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

சாரதியும் நடத்துனரும் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். எனினும் அந்த பேருந்தில் பயணித்த 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.

கடந்த 5 நாட்களாக ஆறு பேரையும் கண்டறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டிருந்த போதிலும், அவர்களை கண்டறிய முடியாத நிலையில், தற்போது அவர்களின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக நீதிமன்றினை பொலிஸார் நாடியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor