கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள உண்ண வேண்டிய உணவுகள்!

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக கீரை வகைகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. எனவே, பொதுமக்களுக்கான ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது தான் என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய சூழ்நிலை, மக்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்க வழிவகுக்கும் என்பதனால், அனைவரும் காலை, மதிய மற்றும் இரவு உணவுகளை தவறாமல் சாப்பிடுவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், மாச்சத்து, உயிர்சத்து உணவுகள் நம் உணவில் பிரதானமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திக்கு விட்டமின் சி மிகவும் முக்கியமானது. அவை மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து கிடைக்கின்றன. நாளொன்றிற்கு குறைந்தது 3 வகையான மரக்கறிகள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். பிஸ்கட், கேக் அல்லது இனிப்புகள் போன்றவற்றின் சத்துக்கள் மிகவும் மோசமானவை. அன்றாட வாழ்வில் பழங்கள், பால் மற்றும் தானிய வகை உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)