காங்கேசன்துறை வீதி பூநாரி மரத்தடிப் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் நேற்று (20) வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளது.
சரமாரியான வாள்வெட்டினை அடுத்து படுகாயமடைந்த இரு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த திலீப் (26), செந்தீஷன் (24) ஆகிய இரு இளைஞர்களுமே வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;
6 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பல் மஞ்சவனப் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த குறித்த இரண்டு இளைஞர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முனைந்துள்ளனர்.
அந்த குழுவினரிடமிருந்து தப்பித்த இரண்டு இளைஞர்களும் காங்கேசன்துறை வீதி வழியாக வந்துகொண்டிருந்த போது, ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் பூநகரி மரத்தடியில் முச்சக்கரவண்டியினை இடைமறித்த அந்தக் கும்பல், முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் மீதும் சரமாரியான வாள் மற்றும் கோடாரி வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.