Ad Widget

குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

விமானக்கொள்வனவு, வாகனங்கள் மீட்பு, ஜனாதிபதி செலவுக்கென கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு மற்றும் ஊழல் மோசடி உட்பட தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார்.

mahintha

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளித்து ஊடக அறிக்கையொன்றை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதில், ‘2015ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்துக்கு 959 கோடி ரூபாயே ஒதுக்கப்பட்டிருந்தது’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய பயன்பாட்டுக்கான விசேட விமானம் எதனையும் தான் கோரியிருக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னை இழிவுபடுத்தக்கூடிய பிரசாரங்களை புதிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வரவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எனக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. மக்களை திசை திருப்பும் நோக்கில் முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டில் நான் உள்ளேன்.

என்னுடைய அரசாங்கத்தின் போது 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்துக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் புதிய அரசாங்கம் அதை 272 கோடியாக குறைத்து எஞ்சிய தொகையை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒதுக்கியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். செயலகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி 959 கோடி ரூபாய் மாத்திரமேயாகும்.

தேசிய சம்பள ஆணைக்குழு, தேசிய சமுத்திர நடவடிக்கைகளுக்கான குழு உள்ளிட்ட 25 அரச நிறுவனங்கள், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயற்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் பாரியார்களுக்கான செலவுகளையும் ஜனாதிபதி செயலகமே பொறுப்பேற்றுள்ளது. ஜனாதிபதி செயலகம் என்பது நிறுவனம் மற்றும் நிர்வாக ரீதியில் அனைத்து நிறுவனங்களுக்கு சேவை வழங்குவதோடு அதற்காகவே பெருமளவு நிதியும் ஒதுக்கப்படுகிறது. தவிர, ஜனாதிபதி செயலகத்துக்காக ஒதுக்கப்படும் நிதியானது ஜனாதிபதியின் செலவுக்காக ஒதுக்கப்படும் நிதியல்ல.

ஜனாதிபதியின் அலுவலகத்துக்கென்று 2015இல் 375 கோடி ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது. இது ஜனாதிபதி செயலகத்துக்கு கிடைக்கும் நிதியின் ஒரு பகுதியாகும். தற்போதைய அரசாங்கம், ஜனாதிபதி செயலகத்துக்காக ஒதுக்கிய நிதி 275 கோடி ரூபாய் என அறிவித்துள்ளது. ஆகவே, ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியையே ஜனாதிபதி செயலகத்துக்காக ஒதுக்கிய நிதி என்று பிரசாரம் கொண்டுசெல்லப்படுவதாகவே நான் கருகிறேன்.

இதேவேளை, என்னுடைய பாவனைக்கென மக்கள் நிதியிலிருந்து 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு விசேட விமானமொன்றை கொள்வனவு செய்திருந்தேன் என்றும் அதனை பெற்றுக்கொள்ள புதிய அரசாங்கம் மறுத்துவிட்டதாகவும் அதற்கு பதிலாக விமானத்தின் பாகங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. என்னுடைய பாவனைக்காக நான் எந்தவொரு விமானத்தையும் கொள்வனவு செய்யவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தினால் எயார் பஸ் நிறுவனத்தில் இருந்து கொள்வனவு செய்யப்படும் விமானத்தில் சில ஆசனங்களை அகற்றி முக்கிய பிரபுக்கள் பயன்படுத்தக் கூடிய ஒரு தொகுதியை விமானத்தை விற்பனை செய்யும் நிறுவனம் இலவசமாக ஏற்படுத்திக்கொடுக்கத் திட்டமிட்டிருந்தது.

இந்த விசேட தொகுதிக்கான செலவு 15 மில்லியன் டொலர்கள் என்ற போதிலும் அதனை இலவசமாகவே குறித்த நிறுவனம் வழங்கவிருந்தது.

இந்த விடயத்தை அரசாங்கத் தரப்பினர் பிழையான வகையில் மக்கள் முன் எடுத்துச் சென்றுள்ளனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ஜனாதிபதிக்கென்று உத்தியோகபூர்வ இல்லங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் என்னால் ஆடம்பரமாக நிர்மாணிக்கப்பட்டவை என்று அறிவிக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுவும் முற்றிலும் பொய்யான பிரசாரமாகும்.

இதேவேளை, ஜனாதிபதி செலயகத்துக்குச் சொந்தமான வாகங்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவற்றில் 75 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியது. இந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் ஜனாதிபதி செயலகத்தின் வாகன தரிப்பிடங்களாகும். அவை இருக்கவேண்டிய இடங்களிலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டன.

தவிர எந்த அரச நிறுவனத்துக்கு எந்தெந்த வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஜனாதிபதி செயலகத்தின் நிறுவன மற்றும் நிர்வாகப் பிரிவின் வானகங்கள் தொடர்பான ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts