காணி சுவீகரிப்பும் ஓர் இனவழிப்பே – சிவாஜிலிங்கம்

வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் செயற்பாடும் ஒரு இனவழிப்பு நடவடிக்கையே என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

sivajilingam_tna_mp

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றது.

நேற்றய அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தில் மாகாண அரசாங்கத்தின் ஈடுபாடு இல்லாமல் மத்திய அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்ற கருத்தை முன்வைத்தார்.

இதன்போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நீங்கள் வடக்கின் வசந்தம் பற்றி கதைக்கின்றீர்கள். ஆனால் எங்கள் மக்களுடைய காணிகள் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எமது உரிமைகள் கிடைக்க வேண்டும். உரிமைகள் கிடைத்துவிட்டால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் உறவுகள் மற்றும் வெளிநாடுகளின் உதவிகளுடன் மேற்கொள்ள முடியும்.

தமிழர்களாகிய நாங்கள் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு எமது உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது’ என்றார்.

‘தென்னாபிரிக்கா கண்டத்தில் எபோலா வைரஸ் எவ்வாறு பரவியதோ அதேபோல் எமது மக்களுடைய காணிகளை அரசாங்கம் அபகரித்து வருகின்றது. எமது காணிகளை அபகரித்து பௌதீக வளங்களை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.

இன்றுகூட கட்டைக்காட்டு பகுதியில் காணி சுவீரிக்கும் நோக்கில் நிலஅளவை செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக’ கூறினார்.

அத்துடன், வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபையில் விசேட கூட்டத்தொடர் ஒன்று நடத்தப்பட வேண்டும் என சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கூட்டத்தொடரிற்கான திகதியை இன்றை அமர்வு முடிவடையும் போது அறிவிப்பதாக கூறினார்.