Ad Widget

‘காணாமல் போனோ­ருக்கு இறப்புச் சான்­றிதழ் வழங்­க­லா­மென்றால் எமக்கும் அதைத் ­தாருங்கள்’ காணாமல் போனோரின் உற­வுகள் கோரிக்கை.

s1537“உயிரோடு இருக்கும் எங்களுடைய உறவுகளுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கலாம் என்றால் எமக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குங்கள்”. எமக்கு எந்த நிவாரணமும் வேண்டாம். எங்களுடைய உறவுகளை எங்களிடமே ஒப்படையுங்கள்.

எமது பாரம்பரியமான பரம்பரை நிலங்களை அபகரித்துக்கொண்டு எமக்கு வேறு இடங்களில் காணியோ நிவாரணமோ வழங்குவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம். எம்மையும் எமது சொந்த இடத்தில் குடியேற்றுவதற்கான சட்ட உதவியை வழங்குங்கள். என காணாமற்போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உரும்பிராயில் நடைபெற்ற சட்ட உதவி வழங்கல் கலந்துரையாடலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், காணி இழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் எழுப்பிய ஆக்ரோஷமான கேள்வியால் சட்ட உதவி வழங்கல் கலந்துரையாடல் இடைநடுவில் குழம்பியது.

தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுவாரியாக சட்ட உதவி வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது. நீண்டகாலமாக காணாமல் போனவர்களுக்கு இறந்தவர் என்ற அடிப்படையில் இறப்புச்சான்றிதழ் வழங்கல் மற்றும் காணி இழப்பு போன்ற விடயங்களுக்கு சமகால தீர்மானங்களுக்கு அமைய சட்ட உதவியை இலவசமாக வழங்குவது தொடர்பாக பாதிப்புக்கு உள்ளாகியவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது.

இந்தவகையான கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை உரும்பிராய் காளிகோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் கலந்துகொண்டு சரமாரியான வினாக்களை தொடுத்தனர்.

உயிரோடு இருப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கி இறந்துவிட்டதாக கணக்கு முடிக்க வேண்டாம். எமது உறவினர்களை எங்களிடம் ஒப்படையுங்கள். எந்த நிவாரணமும் வேண்டாம்.

எமது சொந்த இடங்களுக்கு பதிலாக எந்த இடத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது சொந்த நிலங்களில் குடியேறுவதற்கான சட்ட உதவியை வழங்க முன்வாருங்கள் நாங்கள் அங்கு குடியேறி எமது நில புலங்களில் பயிர் செய்து நிம்மதியாக வாழ்வோம் என வலியுறுத்தினர்.

Related Posts