கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது அதாவது 26ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
அன்று காலை 11 மணிக்கு மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக்கூடத்தை திறந்துவைக்கவுள்ளதுடன் மாலை 3 மணிக்கு இந்திய உதவி தூதரகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைப்பதோடு கோப்பாய் தேசிய கல்லூரி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் குறித்த கல்லூரியில் நடைபெறவுள்ளது.
27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இளவாலை சென் அன்றீஸ் கல்லூரியிலும், வேம்படி மகளிர் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கூடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
அன்று மாலை 3.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதோடு இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த விஜயத்தின்போது கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டக்ளஸ் நாணயக்கார, மேலதிக செயலாளர், தேசிய பாடசாலைகளின் உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ், தமிழ்ப் பிரிவு பணிப்பாளர் எஸ்.முரளிதரன், இராஜாங்க கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.