கல்வியாலர்களாக சிறுபான்மையினம் இருக்கக்கூடாது: உஷாந்தன்

சிறுபான்மைச் சமூகம் கல்வியலாளர்களாக தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதையே பெரும்பான்மையினர் எதிர்பார்க்கின்றனர் என இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் தெரிவித்தார்.

k-ushanthan

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முகமாலையைச் சேர்ந்த மாணவன் சந்திரகுமார் சுதர்சன் தாக்கப்பட்டமை தொடர்பில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தனால் புதன்கிழமை (06) வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இளைஞர்களின் பிரதிநிதியாக ஒரு இளைஞனுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இச்சம்பவத்தை பார்க்கப்பட வேண்டியுள்ளது.

நாளைய உலகை ஆளப்போகின்ற இளம் சந்ததி மீது தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது எந்தளவுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கப் போகின்றது என்பதை சிந்தித்தாக வேண்டும்.

முகமூடி அணிந்த ஒரு நபர் தனது வாயைப் பொத்திப் பிடித்திருக்க, மற்றுமொருவர் தன்னைத் தடியொன்றினால் பலமாகத் தலையில் தாக்கியதாகவும் இதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான மாணவன் தெரிவித்திருந்தார்.

தமிழர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அதிகளவில் சென்றதனால் தான் தரப்படுத்தல் முறைகளும் வந்தன. பல சோதனைகளைத் தாண்டி பல்கலைக்கழக பட்டம் என்னும் கனவுடன் செல்கின்றபோது இவ்வாறான சம்பவங்கள் அவற்றை தவிடுபொடியாக்கி சிறுபான்மையின மாணவர்கள் மத்தியில் அச்சம் ஒன்றை ஏற்படுத்துவது கவலைக்குரியது.

இவ்வாறான சம்வங்கள் விரும்பத்தகாக விளைவுகளை உருவாக்க கூடியன. இவ்வாறான குற்றங்கள் கண்டிக்கப்படவேண்டியவை, என்பதுடன் தண்டிக்கப்படவும் வேண்டியவை என அந்த கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.