கரணவாய் கிழக்கு ஜே – 351 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர்க் குழாய்களை, இனந்தெரியாதோர் சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு உடைத்துள்ளனர் என நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கிராமத்தில் வசிக்கு மக்களுக்கு செல்வபுரம் பகுதியிலிருந்து மூன்று குழாய்களில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த மூன்று குழாய்களையும் சேதமாக்கியதுடன், அதன் இணைப்புக்களை இனந்தெரியாதோர் சிலர் நேற்றிரவு உடைத்துள்ளனர்.
உவர்நீர் கிணறுகள் உள்ள அப்பகுதி மக்கள், மேற்படி குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரினையே நம்பியிருப்பதுடன் குழாய்கள் உடைக்கப்பட்டதினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.