கண்ணீரால் கரைந்த கோப்பாய் பிரதேச செயலகம்

யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

women-crieng

அதன்படி கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவில் காணாமல் போனவர்களுக்கான பதிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் 66 பேரே விசாரணைக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் இன்றைய தினம் காலையிலே 106 பேர் பதிவுகளை மேற்கொண்டனர். தங்களின் உறவுகளும் காணமல் போயுள்ளனர் ஏன் 66 பேரை மட்டும் விசாரணை செய்கின்றீர்கள் தங்களையும் விசாரணை செய்ய வேண்டும் என இன்றைய தினம் வருகை தந்த உறவுகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதற்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேரம் போதமை காரணமாக இன்றைய தினம் கடிதம் அனுப்பப்பட்ட 66 பேர் மட்டுமே விசாரணை செய்யப்படுவார்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள் இன்றைய தினம் விசாரணை செய்ய முடியாதவர்களை எப்போது விசாரணை செய்வீர்கள்? கிளிநொச்சியிலும் இப்படித்தான் தெரிவித்து விட்டு வந்துள்ளீர்கள் எங்களுக்கும் அப்படித்தான் கூறுகின்றீர்கள் எங்களுக்கு சரியான பதிலை கூறுங்கள். நாங்கள் இறப்பதற்கு முன்னர் எங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தாருங்கள், நான்கு நாட்கள் போதாது என்றால் நாட்களை கூட்டி விசாரணை செய்யுங்கள், நாங்களும் காணமல் போனவர்களின் உறவுகளே, இன்னும் எத்தனை காலங்கள் எங்கள் உறவுகளை காணாது அலைந்து திரிவது,எங்களுக்கு விடிவே கிடையாதா? என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினர்.

ஆனாலும் பலன் கிடைக்கவில்லை தாங்கள் வேறு ஒரு தினத்தில் வந்து விசாரணை செய்வதாக கூறிச் சென்றுவிட்டார்கள். இது ஒறுபுறமிருக்க கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு பகுதியில் வசிக்கும் ஒருவர் கொழும்பில் தமது உறவு காணமல் போனதாக முறைப்பாடு மேற்கொள்ள வந்திருந்தனர். ஆனால் 1990 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணமல் போனவர்களே இங்கு விசாரணை செய்யப்படுவதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்து அவரை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாளை சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், நல்லூர், யாழ் பிரதேசசங்களை உள்ளடக்கியதாக 16 மற்றும் 17ஆம் திகதிகளில் மாவட்டச் செயலகத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

கணவரை இராணுவத்தினரிடமே ஒப்படைந்தேன் அவரை மீட்டுத் தாருங்கள்,ஆணைக்குழுவின் முன்னால் ஒலித்த குரல்