கணிதம் சித்தியடையாதவர்களும் இரண்டு வருடம் உயர்தரம் பயில அனுமதி

EXAMகணித பாடத்தில் சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரத்தில் இரண்டு வருடம் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த காலத்தில் கட்டாயமாக சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரத்தில் ஒரு வருட கால அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இனிவரும் காலங்களில் இவ்வாறு சித்தியடையாத மாணவர்கள் தொடர்ந்து இரண்டு வருடங்கள் உயர்தரத்தில் கல்வி பயில முடியும் எனவும் இருப்பினும் குறித்த இரண்டு வருட காலத்தில் இவர்கள் சாதாரணதர கணித பாடத்தில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும் எனவும் அமைச்சரவை முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இதேவேளை கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அமைச்சரவையால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.