கடற்படையினரால் கஜதீபன் தடுத்து வைப்பு

Kajatheepan-tnaதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனை கடற்படையினர் மண்டைதீவில் வைத்து வெள்ளிக்கிழமை தடுத்து வைத்ததாக கஜதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கஜதீபன் மேலும் தெரிவிக்கையில்,

நான் யாழிலிருந்து ஊர்காவற்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மண்டைதீவில் வைத்து கடற்படையினர் பயணிக்கவிடாமல் என்னை தடுத்தனர்.

‘உங்களின் வாகன இலக்கம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு, தடுத்து வைக்குமாறு எங்கள் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே உங்களை அனுமதிக்குமாறு உத்தரவு கிடைத்ததன் பின்னரே உங்களை செல்ல அனுமதிக்கமுடியும்’ என்று கடற்படையினர் எனக்குத் தெரிவித்தனர்.

அரை மணிநேரம் கழித்தே என்னை அவர்கள் செல்ல அனுமதித்ததால் செல்லவேண்டிய நிகழ்ச்சிக்கு நேரம் பிந்தியே நான் சென்றேன்.

அரசின் பிடி ஊர்காவற்துறை உள்ளிட்ட தீவகப்பகுதிகளில் அரசின் செல்வாக்கு வடமாகாணசபை தேர்தலின் பின்னர் குறைந்ததை அடுத்தே தீவகப்பகுதியில் கூட்டமைப்பினரின் அரசியல் செயற்பாடுகளை முடக்கி, அம்மக்களை மீண்டும் தனது இரும்புப்பிடிக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் அரசு ஈடுபடுகின்றது. இதன் ஒரு பகுதியே தனக்கு நேர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திடமும், வடமாகாணசபையின் அவைத்தலைவரிடமும் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.