‘ஒரே தேசம்’ : 70 ஆவது சுதந்திர தினம் நாளை

ஒரே தேசம்’ என்னும் தொனிப்பொருளில் இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரித்தானிய இளவரசர் எட்வேட் தம்பதியினர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், பிரதமர நீதியரசர் பிரசாத் டெப், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் உட்பட அரைசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் ஏழாயிரத்திற்கு அதிகமான படைவீரர்கள் கலந்து சிறப்பிப்பதோடு தேசிய கீதம் இம்முறையும் சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளில் இசைக்கப்படவுள்ளது.

இதேவேளை இலங்கைமுழுவதும் சிறப்பிக்கப்படவுள்ள 70ஆவது சுதந்திரதினத்தை உலகளாவிய ரீதியில் 118நாடுகளில் இலங்கையின் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திரதினம் அனுஸ்டிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.