ஒரே இரவில் நான்கு ஆலயங்களில் திருட்டு

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் அருகருகே இருந்த நான்கு ஆலயங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்கம் மற்றும் வெள்ளியிலான பொருட்கள் செவ்வாய்க்கிழமை (19) இரவு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருட்டு சம்பவம் சுதுமலை வடக்கு பகுதியில் அமைந்துள்ள சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

சிவனாலயத்தின் முன்புறத்திலிருந்த இரு கதவுகளையும் உடைத்து மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நகைகளை எடுத்துள்ளதுடன், சுற்றுமதிலால் ஏறி முருகன் ஆலய வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கிரீடத்தையும் திருடிச் சென்று அதில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் குடைகளை எடுத்துக் கொண்டு கிரீடத்தை சிவ ஆலயத்தில் வைத்துள்ளனர்.

பின்னர் அருகாமையிலுள்ள அம்பாள் ஆலயத்தின் கூரை வழியாக உள்ளே சென்று அங்கு காவலாளி கடமையிலிருந்த போதிலும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் மற்றும் முடி என்பவற்றை எடுத்துச் சென்று வெளி மண்டபத்தில் வைத்து உருக்கிப் பார்த்து விட்டு அவற்றை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் மேற்படி மூன்று ஆலயங்களுக்கும் முன்புறமாக அமைந்துள்ள வைரவர் ஆலயத்திற்குச் சென்று மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகத்தை திருடியுள்ளனர்.

இத் திருட்டுச் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.